Categories: Cinema History

அமிதாப்பச்சன் சொல்லும் வெற்றி ரகசியத்தைக் கேளுங்க…

எவ்வளவு உயரம் போனாலும் ஊர்க்குருவி பருந்தாகாது என்பார்கள். அதேபோல் வாழ்வில் எவ்வளவு உயரம் சென்றாலும் பணிவு இருக்க வேண்டும். பணிவு தான் உங்களை மென்மேலும் உயர்ந்த அந்தஸ்த்துக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் அமிதாப்பச்சன் வாழ்வில் நடந்த சுவையான சம்பவம் ஒன்றைப் பார்க்கலாம்.

இந்திப்பட உலகின் சூப்பர்ஸ்டார் என்று அனைவராலும் போற்றப்பட்ட அமிதாப்பச்சன் ஒருமுறை தன் வாழ்வில் நடந்த சுவையான சம்பவத்தை நம்முடன் இப்படி பகிர்ந்து கொள்கிறார்.

நான் ஒருமுறை விமானத்தில் சென்று கொண்டு இருந்தேன். எனக்கு பக்கத்து இருக்கையில் வயதான மனிதர் ஒருவர் பேண்ட் சர்ட் அணிந்து இருந்தார். விமானத்தில் உள்ள பயணிகள் அனைவரும் என்னை அடையாளம் கண்டு கொண்டு என் அருகில் வந்து ஹலோ சொல்லி கைகொடுத்துச் சென்றனர்.

ஆனால் பக்கத்து இருக்கையில் இருந்த மனிதர் மட்டும் என்னை கவனிக்கவே இல்லை. இது எனக்கு மன உறுத்தலாக இருந்தது.

எனக்குள் எதற்காக இந்த மனிதர் நம்மை இன்னும் கவனிக்கவில்லை என்ற ஐயப்பாடு எழுந்தது. ஒருவேளை பேப்பரைப் படித்துக் கொண்டு இருந்ததால் அதில் கவனம் செலுத்தி இருக்கலாம் என என்னை நான் சமாதானம் செய்து கொண்டேன்.

இருந்தாலும் எனக்குள் அந்த உறுத்தல் இருந்து கொண்டே தான் இருந்தது. என்ன செய்வது…? இதன் காரணம் என்னவாக இருக்கும் என்ற ரகசியத்தைக் கண்டுபிடிக்க வேண்டுமே என்ற எண்ணம் எழுந்தது. எனக்குள் இருந்த ஈகோ கூட இதன் காரணமாக இருக்கலாம்.

சிறிது நேரத்தில் டீ பிரேக் வந்தது. அப்போது டீயை நன்கு ருசித்தபடி அமைதியாகப் பருகினார்;. அப்போதும் கூட என்னைப் பார்க்கவே இல்லை. நான் யார் என்று அவருக்குத் தெரியாமல் இருக்குமோ அல்லது ஒருவேளை அவர் என்னைப் பார்ப்பதைத் தவிர்க்கிறாரோ என்ற சந்தேகம் எழ ஆரம்பித்தது.

சரி…இதை எப்படியாவது கண்டுபிடித்து விட வேண்டும் என்ற என் மன இறுக்கத்தைக் குறைக்க வேண்டும் என்ற உந்துதலில் அவரைப் பார்த்து ஹலோ என்று சொன்னேன். அவரும் பதிலுக்கு ஹலோ சொன்னார். பின்னர் சமூகம், பொருளாதாரம், மக்கள், அரசியல் என பல விஷயங்கள் குறித்து பேசினோம். ஆனால் அவரோ எல்லா துறைகளைப் பற்றியும் அருமையாகப் பேசினார்.

எனக்கு இது ஆச்சரியமாக இருந்தது. தொடர்ந்து மெதுவாக சினிமா குறித்து பேச ஆரம்பித்தேன். அவரிடம் நீங்கள் சினிமா பார்ப்பீர்களா என்று கேட்டேன். அதற்கு அவர் அதிகம் பார்த்தது இல்லை. பல ஆண்டுகளுக்கு முன் சில படங்கள் பார்த்து இருக்கிறேன் என்றார்.

உடனே அதனால் தான் அவருக்கு என்னைத் தெரியவில்லை என்று நினைத்துக் கொண்டு நான் சினிமாத்துறையில் தான் இருக்கிறேன் என்று சொன்னேன்.

என்னவாக இருக்கிறீர்கள் என்று கேட்டார். நடிகராக இருக்கிறேன் என்றார். அதைக் கேட்டு அவர் ஆச்சரியப்படவே இல்லை. இன்னும் என்னைப்பற்றி அதிகம் விசாரிப்பார் என்று நினைத்தேன். ஆனால் ஒன்றுமே கேட்கவில்லை. இது எனக்கு பெருத்த ஏமாற்றத்தைத் தந்தது.

விமானம் தரையிறங்கியது. நான் கொஞ்சம் கர்வத்துடன் உங்களுடன் பயணம் செய்தது மகிழ்ச்சி. என் பெயர் அமிதாப்பச்சன் என்றேன். அவரும் சிரித்தப்படி உங்களுடன் பயணம் செய்த இந்த நாள் இனிய நாளாக அமையட்டும். என் பெயர் ஜே.ஆர்.டி.டாடா நான் மோட்டார் தொழில் செய்கிறேன் என்று சொல்லி விடை பெற்றார்.

JRD Ratan Tata

உலகப் புகழ் பெற்ற டாடாவின் அருகிலா நான் பயணம் செய்தேன். அவரிடம் போய் நான் கர்வத்தைக் காட்டி விட்டேனே…அவர் எவ்வளவு பணிவாக நடந்து கொண்டார் என என் தவறை உணர்ந்து கொண்டேன். அன்று முதல் என் ஈகோவைத் தூக்கி எறிந்து பணிவைக் கற்றுக் கொண்டேன்.

Published by
sankaran v