எனக்கே பிடிக்கல!.. கோபத்துல எடுத்த முடிவு அது!.. பல வருஷம் கழிச்சி வெளிப்படையாக சொன்ன அமீர்..
தன்னுடைய வித்தியாசமான படைப்புகளின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் இயக்குனர் அமீர். இயக்குனர் பாலாவின் உதவி இயக்குனராக பணியாற்றியதால் அவரைப் போலவே சினிமாவில் இவரது படங்களும் தனித்து அடையாளம் காணப்பட்டது. சூர்யா நடிப்பில் வெளியான மௌனம் பேசியதே திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.
அதனை தொடர்ந்து ஜீவாவின் மாறுபட்ட நடிப்பில் வெளியான ராம் திரைப்படம் ஓரளவுக்கு இவரை அடையாளப்படுத்தினாலும் 2007 ஆம் ஆண்டு கார்த்தி நடிப்பில் வெளியான "பருத்தி வீரன்" திரைப்படம் தான் தமிழ்நாட்டில் உள்ள பட்டி தொட்டி எங்கும் இவரை கொண்டு போய் சேர்த்தது.
படம் மாபெரும் வெற்றி அடைந்தது மட்டுமின்றி தேசிய விருதுகளையும் குவித்தது. அதன்பின் அமீர் இயக்கிய திரைப்படங்கள் எதுவும் பெரிதளவில் வெற்றியடையவில்லை. இதனால் நடிகராக தன்னுடைய பாதையை மாற்றிக் கொண்டார். இயக்கத்திற்கு முழுக்கு போட்டுவிட்டு இனி முழுநேர நடிகராக தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வரப் போகிறாரா..! என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தான் நடிக்க வந்ததை பற்றி பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார் அமீர்.
அதில் தொடர்ந்து நடிகராகவே பயணிக்க போகிறீர்களா..? அல்லது இயக்கம் மற்றும் நடிகர் என இரண்டையும் சம நிலையில் கொண்டு தமிழ் சினிமாவில் பயணிக்க விரும்புகிறீர்களா..? என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு "அமீர் சினிமாவைப் பொறுத்தவரை எனக்கு முதன்மையானது இயக்கம் தான் அதில் எந்த மாறுபாடும் கிடையாது. எனக்குள் இருக்கும் ஒரு இயக்குனருக்கான கனவு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு செல்கிறது. அதற்கான ஆசைகளும் இருக்கிறது".
"நான் நடிகனாக வேண்டும் என்று எடுத்த முடிவு கோபத்தின் வெளிப்பாடு தானே தவிர நானே விருப்பப்பட்டு எடுத்த முடிவு கிடையாது. நான் ஒரு நடிகனாக இருக்க எனக்கு விருப்பமே கிடையாது. இந்த சமூகத்தில் என்னை தேடி வரும் மனிதர்களின் மேலுள்ள மரியாதையின் காரணமாகவேதான் நடிக்கிறேன். அதைத் தவிர எனக்கு நடிப்பில் மீது எந்தவித ஈர்ப்பும் இருந்ததில்லை. முதலில் நான் ஒரு இயக்குனர் அதன் பிறகு தான் நடிகன்" என்று அந்த பேட்டியில் கூறியுள்ளார்.