ஓவராக பேசி ஜனநாயகனுக்கு ஆப்பு வைச்சிட்டாரே விஜய்!... கொஞ்சம் சூதானமே இருங்க தளபதி!...
Jananayagan: நடிகர் விஜய் எப்போது அரசியலுக்கு வருகிறேன் என அறிவித்தாரோ அப்போது முதலே தமிழக அரசியல் சூடுபிடிக்க துவங்கிவிட்டது. தமிழகத்தில் சினிமாவையும், அரசியலையும் பிரிக்க முடியாதபடி ஒன்றாகவே இருக்கிறது. அதற்கு காரணம் சினிமாவிலிருந்து கலைஞர் கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோர் அரசியலுக்கு வந்து முதல்வராக நாட்டை ஆண்டிருக்கிறார்கள்.
அதனால்தான் நடிகர்களுக்கும் அரசியல் ஆசை வருகிறது. நடிகர் அரசியலுக்கு வரும்போது அது அவர்களின் திரைப்படங்களின் வியாபாரத்தை பாதிக்கும். அப்படிப்பட்ட எம்.ஜி.ஆரே தனது உலகம் சுற்றும் வாலிபன் படத்தை மிகவும் கஷ்டப்பட்டு ரிலீஸ் செய்தார். அரசியல்ரீதியான நெருக்கடி அப்போது அவருக்கு இருந்தது.
இப்போதைய நிலவரப்படி விஜயும் அதை சந்திக்க வேண்டியிருக்கிறது. விஜய் இப்போது ஹெச்.வினோத் இயக்கத்தில் ஜனநாயகன் என்கிற படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இது தெலுங்கில் பாலையா நடித்து வெளிவந்த பகவந்த் கேசரி படத்தின் ரீமேக் என சொல்லப்படுகிறது. அதோடு, அந்த கதையில் கொஞ்சம் அரசியலையும் சேர்த்து கதையை உருவாக்கியிருப்பதாக சொல்லப்படுகிறது.
ஜனநாயகன் படத்தை 2026 பொங்கலுக்கு வெளியிட திட்டமிட்டுள்ளனர். ஷூட்டிங் கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. ஆனால், படத்தின் வியாபாரத்தில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. பொதுவாக விஜய் படமென்றால் அப்படத்தின் தமிழக உரிமையை வாங்க பலரும் போட்டி போட்டுவார்கள். ஆனால், விஜய் அரசியலுக்கு வந்து திமுகவை கடுமையாக விமர்சித்து வருவதால் பலரும் பயப்படுகிறார்களாம்.
ஏற்கனவே ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் ஜனநாயகனின் தமிழக உரிமையை வாங்குவதாக இருந்தது. ஆனால், அஜித்தின் அடுத்த படத்தை இந்நிறுவனம் தயாரிக்கவிருப்பதால் விலகிக்கொண்டது. அடுத்து ஏஜிஎஸ் நிறுனமும் முயற்சி செய்து வந்தது. ஆனால், அரசியல் சூடுபிடித்துள்ள நிலையில் ஆளும் கட்சியின் கோபத்திற்கு ஆளாக வேண்டாம் என நினைத்து அந்த நிறுவனம் விலகிவிட்டது.
இப்போது மாஸ்டர் மற்றும் லியோ படங்களை தயாரித்த தயாரிப்பாளர் லலித்குமார் மற்றும் ஃபைவ் ஸ்டார் செந்தில் ஆகிய இருவரும் ஜனநாயகன் படத்தை வாங்கும் போட்டியில் இருக்கிறார்கள். ஆனால், மினிமம் கேரண்டி அடிப்படையில் 100 கோடி கேட்பதால் அவர்கள் தயங்கி வருகிறார்கள். லலித்குமார் கொஞ்சம் குறைவான விலையில் கேட்கிறார். எல்லாம் சரியாக அமைந்தால் ஜனநாயகன் வினியோக உரிமையை லலித்குமாரே தட்டிச்செல்வார் என்கிறது சினிமா வட்டாரம்.