‘இட்லி கடை’ படத்துக்கு இவ்ளோ கோடியா? பக்கா ப்ளான் போட்டு வேலை பார்க்கும் தனுஷ்
தனுஷின் இயக்கத்தில் கடைசியாக வெளியான திரைப்படம் ராயன். இது அவருக்கு 50வது திரைப்படமாகவும் அமைந்தது. படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும் பெற்றது. மேலும் 100 கோடி கிளப்பிலும் படம் இணைந்தது. அடுத்ததாக தனுஷ் ‘ நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ என்ற படத்தை இயக்கியிருக்கிறார். இந்தப் படத்தின் ஒரு பாடல் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.
நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் திரைப்படம் அடுத்தவருட தொடக்கத்தில் வெளியாக இருக்கிறது. அதனை தொடர்ந்து தனுஷின் 52வது படத்தின் அறிவிப்பு வெளியானது. இட்லி கடை என பெயரிடப்பட்டிருக்கும் இந்த படத்தை தனுஷ்தான் இயக்கி வருகிறார். இது அவர் இயக்கும் 4வது திரைப்படமாகும். இட்லி கடை படத்தை பொறுத்தவரைக்கும் தனுஷ்தான் ஹீரோ என நினைத்திருந்தார்கள்.
ஆனால் இந்தப் படத்தில் தனுஷ் ஒரு கௌரவ வேடத்தில் மட்டும்தான் நடிக்கிறாராம். ஹீரோவாக அருண்விஜய் நடிப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. மேலும் இவருடன் இணைந்து நித்யா மேனன் மற்றும் ஷாலினி பாண்டே ஆகியோரும் நடிக்கிறார்கள்.
படத்தின் படப்பிடிப்பு தேனி மற்றும் பொள்ளாச்சி பகுதிகளில் படமாக்கப்பட்டிருக்கிறது. இன்னும் சென்னையில் சில பகுதிகளில் படமாக்கவேண்டியிருக்கிறதாம். கடைசி கட்ட படப்பிடிப்பை துபாயில் எடுக்க வேண்டியுள்ளதாம்.மொத்தமாக 75சதவீத படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில் மீதமுள்ள படப்பிடிப்பையும் சீக்கிரம் முடித்துவிடுவார்களாம்.
அடுத்தவருட கோடை விடுமுறைக்கு இட்லி கடை படத்தை ரிலீஸ் செய்து விடுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இட்லி கடை படத்தில் தனுஷுக்கு 120 கோடி சம்பளம் என்ற ஒரு தகவல் வெளியாகி வருகிறது. இது உண்மையா என வலைப்பேச்சு அந்தணனிடம் கேட்ட போது அப்படியெல்லாம் இல்லை. 120 கோடியை கையில் கொடுத்தால் மொத்தமா இந்தப் படத்தை எடுத்துவிடுகிறேன் என்று தனுஷ் சொன்னதாக வலைப்பேச்சு அந்தணன் கூறினார்.
ஃபர்ஸ்ட் காப்பி அடிப்படையில் இந்தப் படத்தை தனுஷ் எடுக்க இருக்கிறாராம். மொத்தமாக 120 கோடியை கொடுத்தால் மொத்த செலவுகளையும் தனுஷே பார்த்துக் கொள்வாராம். அவருடைய சம்பளமும் அதில் அடங்கிவிடுமாம். ஆனால் 120 கோடி அவருடைய சம்பளம் என்பது பொய் என வலைப்பேச்சு அந்தணன் கூறினார்.