அந்த மாதிரி படம் கிடைச்சா நான் எப்பவும் ரெடி!.. அசால்ட் பண்லாம்!.. அஜித் பேட்டி!...
Ajithkumar: நடிகர் அஜித்துக்கு சினிமா என்பது தொழில் மட்டுமே. பைக் ரேஸில் கலந்துகொள்வதற்கு பணம் வேண்டும் என்பதற்காகத்தான் அவர் சினிமாவில் நடிக்கவே போனார். இதை அவரே ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார். சினிமாவில் சம்பாதித்ததை வைத்தே அவர் நிறைய பைக் மற்றும் கார் ரேஸ்களில் கலந்துகொண்டார். ஒருகட்டத்தில் அதில் விபத்துக்கள் ஏற்பட்டு உடலில் பல அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டதால் கார் ரேஸ்களில் கலந்து கொள்வதை நிறுத்தினார்.
அதன்பின் பல வருடங்கள் அவர் கார் ரேஸில் கலந்துகொள்ளவில்லை. ஆனால், விடாமுயற்சி பட வேலைகள் துவங்கிய போது துபாயில் நடந்த கார் ரேஸில் அஜித்தின் டீம் கலந்து கொண்டது. அந்த டீமுக்கு அஜித்தே கேப்டனாக இருந்தார். அவர் கார் ரேஸில் கலந்துகொண்ட புகைப்படங்களும், வீடியோக்களும் இணையத்தில் வெளியாகி வைரலானது.
துபாய் போட்டியில் அஜித்தின் டீம் 3வது பரிசை வென்றது. இதற்காக தமிழ்நாடு அரசு முதல் நடிகர்கள், நடிகைகள் மற்றும் ரசிகர்கள் வரை பலரும் அவருக்கு வாழ்த்து கூறினார்கள். கடந்த பல மாதங்களாகவே அஜித் தொடர்ந்து வெவ்வேறு நாடுகளில் நடக்கும் கார் ரேஸ்களில் கலந்துகொண்டு வருகிறார்.
விடாமுயற்சி படத்தை முடித்துவிட்டு குட் பேட் அக்லி படத்தில் நடித்தார். அதை முடித்துவிட்டு கார் ரேஸுக்கு போய்விட்டார். விடாமுயற்சி படத்தை ஓப்பிடும்போது குட் பேட் அக்லி ஓரளவுக்கு வசூலை பெற்றது. ஒருபக்கம், முன்பெல்லாம் ஊடகங்களுக்கு எந்த பேட்டியும் கொடுக்காமல் இருந்த அஜித் இப்போது கார் ரேஸ் நடக்கும் இடங்களில் ஆங்கில ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்து வருகிறார்.
இந்நிலையில், சமீபத்தில் அவரிடம் ‘F1 படத்தில் பிராட் பிட் நடித்தது போல உங்களையும் ஒரு கார் பந்தயம் தொடர்பான படத்தில் பார்க்க முடியுமா?’ என கேட்கப்பட்டது. அதற்கு பதில் சொன்ன அஜித் ‘ ஏன் முடியாது. என் படங்களில் வரும் சண்டைக் காட்சிகளில் நானேதான் நடிக்கிறேன். அப்படிப்பட்ட வாய்ப்புகள் வந்தால் நான் ஏன் நடிக்காமல் இருக்க போகிறேன்?. Fast & Furious அல்லது, F1 போன்ற படங்களின் அடுத்த பாகங்களில் வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக நடிப்பேன்’ என சொல்லியிருக்கிறார்.
அஜித் இப்போது 24H கார் பந்தயத்தில் கலந்து கொண்டு வருகிறார். இந்த போட்டி இந்த வருடம் செப்டம்பர் மாதம் வரை நடக்கவுள்ளது. அதை முடித்துவிட்டு நவம்பர் முதல் பிப்ரவரி வரை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார். அதன்பின் மீண்டும் 2026 மார்ச் முதல் கார் ரேஸில் கலந்துகொள்ள திட்டமிட்டிருக்கிறார் அஜித்.