லேசா கீறுனதுக்கே.. இப்படி அழுதா எப்படி தம்பி?!.. எஸ்.கே-வை வம்பிழுத்த புளூ சட்டை!..
Actor Sivakarthikeyan: தமிழ் சினிமாவில் விஜய் டிவியில் மிமிக்ரி ஷோவில் கலந்துகொண்டு தனது திரை வாழ்க்கையை தொடங்கியவர் சிவகார்த்திகேயன். அதன்பிறகு படிப்படியாக உயர்ந்து ஒரு ஹீரோவாக முன்னேறினார். விஜய் டிவியில் ஆங்கரிங் செய்தபோது ஒரு நிகழ்ச்சிக்கு 4500 சம்பளம் வாங்கி வந்த சிவகார்த்திகேயன் தற்போது கோடிகளில் சம்பளம் வாங்கி வருகின்றார்.
திரைப்பயணம்: ஆரம்பத்தில் மெரினா, எதிர்நீச்சல் என சிறுசிறு திரைப்படங்களில் நடித்து வந்த சிவகார்த்திகேயன் அதனை தொடர்ந்து வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்கின்ற திரைப்படத்தில் நடித்து ஒரு சிறந்த பெயரை பெற்றார். பின்னர் இவர் நடித்த ரஜினி முருகன், ரெமோ, காக்கி சட்டை போன்ற திரைப்படங்கள் ரசிகர்களிடையே மிக பெரிய வரவேற்பை பெற்றது. இதனால் தொடர்ந்து சினிமாவில் நல்ல கதைகளை தேர்வு செய்து நடிக்க தொடங்கினார்.
அமரன் திரைப்படம்: தமிழ் சினிமாவில் அடுத்தடுத்த ஹிட் திரைப்படங்களை கொடுத்து வந்த சிவகார்த்திகேயன் ஒரு வளர்ந்து வரும் நடிகராக முன்னேறி இருந்தார். தற்போது அந்த இடத்திலிருந்து தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக மாறி இருக்கின்றார். அதற்கு காரணம் அமரன் திரைப்படம். கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு வெளியான அமரன் திரைப்படம் சக்கப்போடு போட்டது. இந்த திரைப்படத்தின் மூலமாக சிவகார்த்திகேயனின் மார்க்கெட் பெரிய அளவில் உயர்ந்திருக்கின்றது.
இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயனின் நடிப்பு அனைத்து தரப்பினரிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருந்தது. படம் பாக்ஸ் ஆபிஸில் 360 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்திருக்கின்றது. இதனால் அடுத்தடுத்து பெரிய இயக்குனர்களின் படங்களில் கமிட்டாகி பெரிய பட்ஜெட்டில் நடிக்க தொடங்கி இருக்கின்றார் சிவகார்த்திகேயன்.
டார்கெட் செய்கிறார்கள்: சமீபத்தில் ஊடகம் ஒன்றில் பேசிய சிவகார்த்திகேயன் 'சினிமா துறையில் என்னை போன்ற பின்புலம் இல்லாமல் வருபவர்களை பார்த்தால் பலருக்கும் பிடிப்பதில்லை. என்னை போன்ற நடிகர்கள் வளர்வதை அவர்கள் ஏற்றுக் கொள்ள தயங்குகிறார்கள். சோசியல் மீடியாவில் ஒரு குரூப் இருக்கின்றது. என் படம் தோற்று போனால் என்னை மட்டுமே காரணமாக வைத்து பேசுவார்கள்.
அதே என் படம் ஜெயித்தால் படக்குழுவில் என்னைத் தவிர மற்றவர்களுக்கு கிரெடிட்ஸ் கிடைத்துவிடும். தோல்விக்கு பொறுப்பேற்கும் எனக்கு, வெற்றியிலும் பங்கு பெற எல்லா உரிமையும் இருக்கின்றது' என்று கூறியிருந்தார்.
புளூ சட்டை விமர்சனம்: நடிகர் சிவகார்த்திகேயனின் இந்த கருத்துக்கு சினிமா விமர்சகர் புளூ சட்டை மாறன் தனது சமூக வலைதள பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டு இருக்கின்றார். அதில் அவர் தெரிவித்திருந்ததாவது: ' டான் திரைப்படத்தில் எஸ் ஜே சூர்யா மற்றும் அமரன் திரைப்படத்தில் சாய்பல்லவி நடிப்பு தான் படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம் என்பது பலரின் கருத்து. அது உண்மையும் கூட..
பார்க்கிங் திரைப்படத்தில் எம்.எஸ்.பாஸ்கர், லப்பர் பந்தில் தினேஷ் நடிப்புதான் பெரிதாக பேசப்பட்டது. அதற்காக ஹரிஷ் கல்யாண் நடிப்பு சரி இல்லை என்று யாரும் கூறவில்லை. நல்ல கதைகளை தேர்வு செய்கிறார் என பாராட்டவே செய்தார்கள். அவரும் இப்படி பொதுவெளியில் வந்து என்னை யாரும் பாராட்டவில்லை என்று புலம்பவில்லை.
ஆகவே சென்டிமென்ட் பிட்டெல்லாம் போடாமல் வாலி, பருத்திவீரன், பிதாமகன், அசுரன் போன்ற சிறந்த நடிப்பை தரம் முயலுங்கள். பாராட்டு தானாக வரும். ஒரே ஒரு அமரன் ஓடியதும் நீங்கள்தான் அடுத்த விஜய் என ஒரு குரூப் காமெடி செய்தாலும், இன்னொரு குரூப் கலாய்க்க தான் செய்யும். இதை விட பல மடங்கு விமர்சனங்களை தாண்டி தான் ரஜினி, கமல் அரை நூற்றாண்டை கடந்தும், விஜய் அஜித் கால் நூற்றாண்டை கடந்தும் இந்த இடத்தில் இருக்கிறார்கள். லேசா கீறுனதுக்கே.. இப்படி அழுதா எப்படி தம்பி? நடிப்பை மேலும் இம்ப்ரூவ் பண்ற வழியை பாருங்கள்' என்று கூறியிருக்கின்றார்.