இனிமே விஜய் சேதுபதியை நம்பி யூஸ் இல்ல!.. சியான் விக்ரமிடம் போன இயக்குனர்!..

Director Prem: 96 திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் பிரேம். இந்த படத்தில் விஜய் சேதுபதி, திரிஷா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். பள்ளியில் ராம், ஜானு இருவரிடம் ஏற்படும் காதல், காலத்தின் ஓட்டத்தில் ஜானு திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட ராமோ சிங்கிளாக இருக்கிறார்.
ரீயூனிட்டில் இருவரும் சந்திக்க நேர்கிறது. ராம் இன்னமும் திருமணம் செய்துகொள்ளாமல் இருப்பதை கேட்டு உடையும் ஜானு அவருடன் ஒரு நாள் பயணிக்கிறார். அப்போது இருவருக்கும் இடையே என்ன நேர்கிறது என்பதுதான் படத்தின் கதை. பள்ளி கால காதலை மிகவும் அழகாக காட்டியிருந்தார் பிரேம். இந்த படம் பலருக்கும் தங்களின் பால்ய காதலை நினைவுப்படுத்தியது.
இந்த படத்திற்கு பின் கார்த்தி, அரவிந்த்சாமியை வைத்து மெய்யழகன் படத்தை இயக்கினார் பிரேம். இதுவும் ஒரு ஃபீல் குட் படமாகவே வெளிவந்தது. உறவின் அருமையை இப்படம் பேசியது. உறவுக்கார திருமணத்தில் கலந்துகொள்ள சொந்த ஊருக்கு செல்லும் அரவிந்த்சாமி சிறு வயதில் பழகிய உறவுக்கார சிறுவனை யாரென்றே தெரியாமல் அவனுடன் ஒருநாள் தங்குகிறார். அவனின் அன்பை தாங்கிக்கொள்ள முடியாமல் அவர் தவிக்கும் தவிப்புதான் படத்தின் கதை. இப்படமும் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த படத்திற்கு பின் 96 படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க ராம் ஆசைப்பட்டார். அதற்கான முழுக் கதையையும் எழுதி விஜய் சேதுபதியிடம் கொடுத்தார். கதை நன்றாக இருந்தாலும் பிரேமை காக்க வைத்தார் விஜய் சேதுபதி. மெய்யழகன் வெளியாகி கிட்டத்தட்ட 10 மாதங்கள் ஆகிவிட்டது.
எனவே, இனிமேலும் விஜய் சேதுபதியை நம்பி பலனில்லை என முடிவெடுத்த பிரேம் சியான் விக்ரமிடம் ஒரு கதை சொல்லி சம்மதம் வாங்கியிருக்கிறார். விரைவில் இப்படம் துவங்கவுள்ளதாகவும், இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் சொல்லப்படுகிறது. இந்த படத்தை வேல்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.