{"vars":{"id": "76339:5011"}}

ஆஸ்கருக்கு போன ராயன்!.. தனுஷுக்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரம்!.. போட்றா வெடிய!...

தனுஷ் இயக்கி நடித்திருக்கும் ராயன் படத்துக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்திருக்கிறது.
 

துள்ளுவதோ இளமை படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கியவர் தனுஷ், செல்வராகவன், வெற்றிமாறன் போன்ற சிறந்த இயக்குனர்களின் படங்களில் நடித்து தன்னை மெருகேற்றிக்கொண்டவர். வசூலுக்காக கமர்ஷியல் மசாலா படத்தில் நடித்தாலும் அவ்வப்போது கதைக்கு முக்கியத்துவம் உள்ள நடிப்புக்கு தீனி போடும் கதாபாத்திரங்களில் நடிக்கும் நடிகர் இவர்.

பொல்லாதவன், ஆடுகளம், வட சென்னை, அசுரன், கர்ணன் என சொல்லிக்கொண்டே போகலாம். தமிழ் மட்டுமின்றி ஹிந்தியிலும் நுழைந்து கலக்கியவர் தனுஷ். 2 ஹாலிவுட் படங்களிலும் நடித்திருக்கிறார். கோலிவுட்டின் முன்னணி நடிகராக இருக்கும் தனுஷ் அவ்வப்போது படத்தை இயக்கியும் வருகிறார்.

அப்படி அவர் இயக்கி நடித்து சமீபத்தில் வெளியான திரைப்படம்தான் ராயன். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில் தனுஷுடன் காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன், துஷரா விஜயன், அபர்ணா பாலமுரளி என பலரும் நடித்திருக்கிறார். கேங்ஸ்டர் கும்பலின் தலைவனாக எஸ்.ஜே.சூர்யா மற்றும் சித்தப்பு சரவணன் ஆகியோர் நடித்திருக்கிறார்.

படத்திற்கு எதிர்மறையான விமர்சனங்கள் இருந்தாலும் இந்த படம் வெளியானது முதல் நாளே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு இருந்தது. பல நாட்களுக்கு பின் ராயன் படத்துக்கு தியேட்டர்களில் அதிகமான அட்வான்ஸ் புக்கிங் இருந்தது. படம் வெளியாகி 6 நாட்களில் சுமார் 100 கோடி வசூலை இப்படம் தாண்டியதாக சொல்லப்பட்டது.

தம்பி தங்கைகளுக்காக சொந்த ஊரை விட்டு சென்னை வரும் தனுஷ் இரண்டு கேங்ஸ்டர் கும்பலுக்கு இடையில் சிக்கி என்ன ஆகிறார் என்பதுதான் படத்தின் கதை. படத்தில் நிறைய வன்முறை காட்சிகளும் இடம் பெற்றிருந்தது. அதனால்தான் இப்படத்திற்கு சென்சார் போர்டு ஏ சான்றிதழ் கொடுத்தது.


இந்நிலையில், ராயன் படத்தின் திரைக்கதை ஆஸ்கர் அகாடமியின் நூலகத்தில் இடம் பெற்றிருப்பதாக சன் பிக்சர்ஸ் நிறுவனமே அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது. இதையடுத்து படக்குழுவினருக்கும், தனுஷுக்கும் திரைத்துறையை சேர்ந்த பலரும் வாழ்த்துக்களை சொல்லி வருகிறார்கள்.