கடைசி விவசாயி எடுத்து சொத்தை இழந்த இயக்குனர்!.. நல்ல படம் எடுத்தா இப்படித்தான்!...

by Murugan |   ( Updated:2025-01-06 02:53:39  )
கடைசி விவசாயி எடுத்து சொத்தை இழந்த இயக்குனர்!.. நல்ல படம் எடுத்தா இப்படித்தான்!...
X

Kadaisi Vivasayi :சினிமா உலகை பொறுத்தவரை நல்ல சினிமா எல்லா நேரத்திலும் வெற்றி பெறாது. நல்ல சினிமாவையே மகாராஜா, வாழை, லப்பர் பந்து போல கமர்ஷியலாக சொன்னால் மட்டுமே வெற்றியடையும். இல்லையெனில், தியேட்டரில் ஒரு வாரம் கூட அந்த படம் தாங்காது. அதற்கு பல உதாரணங்கள் இருக்கிறது.

அறிமுக இயக்குனர் பாரி இளவழகன் இயக்கி நடித்து வெளியான திரைப்படம் ஜமா. கூத்துக்கலையை மையமாக கொண்டு இப்படத்தை உருவாக்கியிருந்தார். இந்த படத்தில் பாரியும், சேட்டனும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தனர். நல்ல சினிமாவை விரும்பும் பலரும் இப்படத்தை பற்றி பாராட்டி பேசினார்கள், எழுதினார்கள்.


ஆனால், இந்த படம் வசூல்ரீதியாக வெற்றியடையவில்லை. அதேபோல்தான் மணிகண்டன் இயக்கிய படம் கடைசி விவசாயி. இவர் ஏற்கனவே காக்கா முட்டை, ஆண்டவன் கட்டளை போன்ற படங்களை இயக்கி நல்ல இயக்குனர் என பேரெடுத்தவர். மதுரை தேனி அருகே வசிக்கும் ஒரு வயதான முதியவர் விவசாயத்திற்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறார், அவரை இந்த சமூகம் எப்படி நடத்துகிறது என்பதை திரைக்கதையாக அமைத்திருந்தார் மணிகண்டன்.

இந்த படத்தில் முருக பக்தராகவும், மனநலம் பாதிக்கப்பட்டவர் போலவும் விஜய் சேதுபதி ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். இந்த படத்தை பலரும் பாராட்டினார்கள். இந்த படத்தை பார்த்த இயக்குனர் மிஷ்கின் ‘கடைசி விவசாயி படம் பார்க்க தியேட்டருக்கு போனேன். தியேட்டரில் 10 பேர்தான் இருந்தார்கள். இது அற்புதமான திரைப்படம். நல்ல படங்களுக்கு ஆதரவு கொடுங்கள்’ என வீடியோவே போட்டார்.


அதோடு, உசிலம்பட்டியில் வசிக்கும் மணிகண்டனை நேரில் போய் சந்தித்து அவருக்கு மாலை அணிவித்து பாராட்டியிருந்தார். வலிமை, துணிவு போன்ற படங்களை இயக்கிய ஹெச்.வினோத் ஊடகம் ஒன்றில் பேசியபோது ‘துணிவு படம் போல கடைசி விவசாயி படத்தையும் ரசிகர்கள் பார்த்து கொண்டாடி இருக்க வேண்டும். அதுதான் சினிமாவின் வெற்றி’ என பேசியிருந்தார்.

கடைசி விவசாயி படம் வசூலை பெறவில்லை. பாக்ஸ் ஆபிசில் இப்படம் தோல்வி அடைந்தது. மணிகண்டனே இப்படத்தை தயாரித்தும் இருந்தார். இந்த படத்தால் ஏற்பட்ட நஷ்டத்தால் சென்னையில் உள்ள தனது வீட்டையே அவர் விற்றுவிட்டாராம். தற்போது, உசிலம்பட்டியில் உள்ள தனது வீட்டில் அவர் வசித்து வருகிறார். அடுத்து மீண்டும் விஜய் சேதுபதியை வைத்து ஒரு படம் இயக்கும் முயற்சியில் அவர் ஈடுபட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.

Next Story