மணிரத்னத்தின் அடுத்த ஹீரோ அவர்தானாம்!... ஹீரோயின் யார் தெரியுமா?..

தமிழ் மட்டுமில்லாமல் இந்திய அளவில் முக்கியமான இயக்குனராக இருப்பவர் மணிரத்னம். இவர் இயக்கிய நாயகன் இந்திய சினிமாவில் முக்கிய படமாக பார்க்கப்பட்டது. மேலும் ரோஜா, பம்பாய், தளபதி, கன்னத்தில் முத்தமிட்டால் போன்ற படங்களும் தேசிய அளவில் கவனம் பெற்றன.
அழகான காதல் கதை என்றாலும், மத தீவிரவாத கதை என்றாலும் பக்கா ஆக்ஷன் படம் என்றாலும் அசத்தலாக எடுப்பார். எம்.ஜி.ஆர் - கலைஞர் கருணாநிதி ஆகியோரின் வாழ்க்கையை வைத்து இருவர் எடுத்து காட்டினார். இதயத்தை திருடாதே, அலைபாயுதே, ஓகே கண்மணி, உயிரே என காதல் ரசம் சொட்ட சொட்ட படம்மெடுக்கும் இயக்குனர் இவர்.
எம்.ஜி.ஆர், கமல்ஹாசன் உள்ளிட்ட பலரும் முயன்று எடுக்க முடியாமல் போன பொன்னியின் செல்வன் நாவலை திரைப்படமாக எடுத்து காட்டி அதில் வெற்றியும் பெற்றார். அதன்பின் கமலை வைத்து தக் லைப் படத்தை இயக்கினார். 38 வருடங்களுக்கு பின் கமலும், மணிரத்னமும் இணைந்ததால் பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டது. ஆனால் படம் வெளீயான பின் நெகட்டிவ் விமர்சனங்களை பெற்றது.

இந்நிலையில் அடுத்து மணிரத்னம் இயக்கும் படத்தில் சீயான் விக்ரமின் மகன் துருவ் ஹீரோவாக நடிக்க போகிறார் என்ற செய்தி வெளியாகியுள்ளது. இந்த படத்தில் ருக்மணி வசந்த் கதாநாயகியாக நடிக்கவுள்ளாராம். ரொமாண்டிக் ஆக்ஷன் பொழுதுபோக்கு படமாக இப்படத்தை மணிரத்னம் உருவாக்கவுள்ளாராம். படத்தின் ஷுட்டிங் வருகிற நவம்பர் மாதம் துவங்கவுள்ளது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.