கங்குவா ரிசல்ட் எதிரொலி!.. சிறுத்தை சிவாவை கைவிட்ட கோலிவுட்!.. கை கொடுப்பாரா அஜித்?!..

by Murugan |   ( Updated:2025-01-22 17:30:13  )
siruthai siva
X

Ganguva: தெலுங்கு படங்களில் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்து வந்தவர் சிவா. சிறுத்தை திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக மாறினார். முதல் படமே சூப்பர் ஹிட் அடித்தது. அடுத்து அஜித்தை வைத்து வீரம் படத்தை இயக்கினார். இந்த படம் மூலம் அஜித்துக்கு மிகவும் பிடித்த நபராக சிவா மாறினார்.

எனவே, தொடர்ந்து சிவாவின் இயக்கத்தில் வேதாளம், விவேகம், விஸ்வாசம் என 3 படங்களில் நடித்தார் அஜித். இதில் விவேகம் மட்டுமே ஓடவில்லை. மற்ற இரண்டு படங்களும் சூப்பர் ஹிட் ஆனது. அதிலும், ரஜினியின் பேட்ட படம் வெளியான போது அதற்கு போட்டியாக விஸ்வாசம் வெளியாகி ரஜினி படத்தை விட அதிக வசூல் செய்து ரஜினியையே ஆச்சர்யப்படுத்தியது.

அதன் விளைவாகத்தான் சிவாவை அழைத்து தனக்கொரு கதையை உருவாக்க சொன்னார். அப்படி உருவான படம்தான் அண்ணாத்த. இந்த படத்தில் ரஜினியின் தங்கையாக கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார். செண்டிமெண்ட் காட்சிகள் அதிகம் இருந்தாலும் படம் சுமாரான வெற்றியையே பெற்றது.


அடுத்து கேம் ஆப் த்ரோன்ஸ் சீரியஸ் போல ஒரு படமெடுக்க ஆசைப்பட்டு கங்குவா படத்தின் கதையை எழுதினார். இந்த படத்தில் சூர்யா இரட்டை வேடங்களில் நடித்திருந்தார். இந்த படத்தை சூர்யாவின் உறவினர் ஞானவேல் ராஜா அதிக பொருட்செலவில் தயாரித்திருந்தார். அதோடு, இந்த படத்தை பில்டப் செய்து ஊடகங்களில் பேசினார்.

கங்குவா படம் பல மொழிகளிலும் வெளியாகி 2 ஆயிரம் கோடி வசூலிக்கும் என்றெல்லாம் சொன்னார். சூர்யாவோ ‘இந்த படத்தை பார்த்து எல்லாரும் வாயை பொளக்க போறாங்க’ என்றெல்லாம் பேசினார். ஆனால், இந்த படம் வெளியானபோது சூர்யாவை குறிவைத்து ஒரு கும்பல் களமிறங்கி படத்தை கடுமையாக விமர்சித்தனர்.

படம் பார்த்தவர்களும் படம் சரியில்லை என சொன்னதால் இப்படம் பாக்ஸ் ஆபிசில் தோல்வி அடைந்தது. பொதுவாக சினிமாவில் ஒரு இயக்குனர் தோல்விப்படங்களை கொடுத்தால் படம் கொடுக்க யாரும் முன்வரமாட்டார்கள். இப்போது அந்த நிலையில்தான் சிவா இருக்கிறார். அடுத்த படத்திற்கு தயாரிப்பாளர் கிடைக்கவில்லை என தனக்கு நெருங்கிய நட்பு வட்டாரத்தில் புலம்பியிருக்கிறார் சிவா.

அஜித்தின் குட் புக்கில் சிவா இருப்பதால் ‘ஃபீல் பண்ண வேண்டாம். காத்திருங்கள்’ என அஜித் சிவாவிடம் சொன்னதாக ஏற்கனவே ஒரு செய்தி உண்டு. எனவே, அஜித் நினைத்தால் அவரின் படத்தை இயக்கும் வாய்ப்பு சிவாவுக்கு கிடைக்க வாய்ப்புண்டு. ஆனால், இந்த மாதம் அக்டோபர் மாதம் வரை அஜித் சினிமவில் நடிக்கமாட்டார். அதுவரை சிவா காத்திருக்க வேண்டும்.

சிவாவின் நிலைமை என்ன ஆகப்போகிறது என்பது இனிமேல்தான் தெரியவரும்!...

Next Story