விக்ரமின் ஹிட் படத்தை சுட்டு மத கஜ ராஜா எடுத்த சுந்தர்.சி!.. அதே டெய்லர்.. அதே வாடகை!..
Madha gaja raja: சினிமாவில் ஒரு கதையை காப்பி அடித்து படம் எடுப்பது என்பது பல வருடங்களாக இருக்கிறது. 60களில் சிலர் ஆங்கில நாவல்களையும், ஆங்கில படங்களையும் காப்பி அடித்தோ, பட்டி டிங்கரிங் செய்தோ தமிழில் படமாக எடுப்பார்கள். அப்போதெல்லாம் அப்படி எடுக்க எந்த உரிமையையும் வாங்க மாட்டார்கள்.
ஆனால், ஒரு கட்டத்தில் தங்கள் கதையை ஒருவர் காப்பி அடித்தால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வது என்பது வந்தவுடன் முறையாக உரிமை வாங்கி சிலர் படமெடுத்தார்கள். இதில் சில இயக்குனர்கள் புத்திசாலித்தனமாக ஒரு படத்தின் கதையை அப்படியே காப்பி அடிக்காமல் அதிலிருந்து ஒரு வரிக் கதையை மட்டும் உருவி வேறு மாதிரி திரைக்கதையை அமைப்பார்கள். இப்படி செய்தால் நீதிமன்றத்தில் வழக்கு தொடரமுடியாது. அட்லீ இதற்கு பெரிய உதாரணம்.
சுந்தர் சி: சில இயக்குனர்கள் ஏற்கனவே வெற்றி பெற்ற சில படங்களிலிருக்கும் காட்சிகளை உருவி தங்களின் படத்தில் வைத்து விடுவார்கள். அதில் முக்கியமானவர் சுந்தர் சி. பல படங்களை காப்பி அடித்து படமெடுத்திருக்கும் இயக்குனர் இவர். சிவாஜி - சந்திரபோஸ் நடித்த ஒரு படத்தை அப்படியே காப்பி அடித்துதான் உள்ளத்தை அள்ளித்தா படத்தை எடுத்தார்.
ஷாருக்கானின் தில்வாலே துல்ஹானியா லே ஜாயங்கே படத்தை காப்பி அடித்து அஜித்தை வைத்து ‘உன்னைத் தேடி’ என்கிற படத்தை இயக்கினார். இந்நிலையில்தான், தற்போது வெளியாகியுள்ள மத கஜ ராஜா படத்தில் பல காட்சிகள் விக்ரம் நடித்து ஹிட் அடித்த தூள் படத்திலிருந்து சுடப்பட்டிருக்கிறது.
விக்ரமின் தூள்: வில்லனால் பாதிக்கப்பட்ட தனது நண்பர்களின் பிரச்சனையை தீர்த்து வைப்பதற்காக சென்னை வருகிறார் விஷால். தூள் படத்தில் தனது கிராமத்து பிரச்சனையை தீர்ப்பதற்காக சென்னை வருவார் விக்ரம். வில்லனின் புகழ், அரசியல் வாழ்க்கை என ஒவ்வொன்றையும் சொல்லி சொல்லி காலி செய்வார் விக்ரம். மத கஜ ராஜாவிலும் மூன்று M அதாவது வில்லனின் மந்திரி பதவி, மணி, மீடியா என மூன்றையும் காலி செய்கிறார் விஷால்.
தூள் படத்தில் ஜோதிகாவை வெறுப்பேற்ற ரீமா சென்னிடம் ஆங்கிலம் கற்றுக்கொள்ள போவார் விக்ரம். மத கஜ ராஜாவில் அஞ்சலியை வெறுப்பேற்ற வரலட்சுமியிடம் யோகா கற்றுக்கொள்ளப் போகிறார் விஷால். தூள் படத்தில் வில்லனை காலி செய்ய உண்ணாவிரத போராட்டம் நடத்துவார் விக்ரம். இந்த படத்தில் ஊர்வலத்தை நடத்துகிறார் விஷால். இப்படி தூள் படத்தின் கதையை மட்டுமில்லாமல், காட்சிகளையும் கொஞ்சம் மாற்றி எடுத்திருக்கிறார் சுந்தர்.சி. அதோடு, கமலின் மகளிர் மட்டும் படத்திலிருந்தும் ஒரு காட்சியை அப்படியே உருவி வைத்திருக்கிறார்.
இதையெல்லாம் கண்டுபிடித்த ரசிகர்கள் இந்த தகவல்களையெல்லாம் ஃபேஸ்புக், டிவிட்டர் போன்ற சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.