அயோத்தியை விட பார்க்கிங் நல்ல படமா?.. தேசிய விருது சரியா?.. பொங்கும் ரசிகர்கள்...

பொதுவாகவே மத்திய அரசால் கொடுக்கப்படும் தேசிய விருதுகள் உண்மையிலேயை சிறந்த படங்களுக்கும், நடிகர்களுக்கும் கொடுக்கப்படுவதில்லை என்கிற விமர்சனம் பல வருடங்களாகவே இருக்கிறது. பல வருடங்களாகவே தென்னந்திய சினிமா கலைஞர்களுக்கு தேசிய விருதுகள் கொடுக்கப்படாமல் இருந்தது. பெரும்பாலும் ஹிந்தி, மாரத்தி மொழி படங்களுக்கே இந்த விருதை கொடுத்தார்கள். அதனால்தான் நடிகர் திலகம் சிவாஜிக்கே தேசிய விருது கொடுக்கப்படவில்லை.
கடந்த 30 வருடங்களில் இது கொஞ்சம் மாறியிருக்கிறது. தேசிய விருது பட்டியலில் தென்னிந்திய சினிமா பெயர்களும் இடம் பெறுகிறது. ஆனாலும் பல திறமையான கலைஞர்களும் விருது பற்றிய கோபத்தில் இருக்கிறார்கள். அதனால்தான் பின்னனி பாடகி எஸ்.ஜானகி, இளையராஜா ஆகியோர் தங்களுக்கு கொடுக்கப்பட்ட தேசிய விருதை புறக்கணித்தனர்.

தற்போது 71வது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதில் பார்க்கிங் படத்திற்கு சிறந்த படம், திரைக்கதை, துணை நடிகர் என 3 விருதுகள் அறிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும் சிறந்த இசைக்காக வாத்தி படத்தின் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த நடிகருக்கான விருது ஜவான் படத்திற்காக ஷாருக்கான் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.

இதில் பார்க்கிங் படத்திற்கும், ஷாருக்கானுக்கும் விருது அறிவிக்கப்பட்டிருப்பதை பலரும் விமர்சனம் செய்து வருகிறார்கள். பார்க்கிங் நல்ல படம் என்றாலும் அதே ஆண்டில் வெளியான அயோத்தி அதைவிட சிறந்த படம். அந்த படத்திற்கு தேசிய விருது கொடுக்கப்பட்டிருக்க வேண்டும் என பலரும் சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள். அதேபோல் ஆடுஜீவிதம் படத்தில் அற்புதமான நடிப்பை கொடுத்த பிரித்திவிராஜுக்கே தேசிய விருது கொடுக்கப்பட்டிருக்க வேண்டும் எனவும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.