ஷங்கருக்கு இந்தியன் 2-வும் போச்சு. கேம் சேஞ்சரும் போச்சா?!.. 3 நாட்களில் இவ்ளோதான் வசூலா?!..

by Murugan |
game changer
X

Game Changer: தமிழ் சினிமாவில் அதிக பட்ஜெட் திரைப்படங்களை உருவாவதை துவங்கி வைத்தவர் ஷங்கர். இவர் இயக்கிய எல்லா படங்களுமே பல கோடி பட்ஜெட்டுக்களில் உருவானது. எனவே, பிரம்மாண்ட இயக்குனர் என்கிற பெயரும் இவருக்கு உருவானது. ஒரு கட்டத்தில் ஷங்கரே நினைத்தாலும் இனிமேல் அவரால் சிறிய பட்ஜெட் படங்களை எடுக்க முடியாது என்கிற நிலை உருவானது. இதை அவரே ஒரு பேட்டியிலும் சொல்லியிருந்தார்.

ஷங்கர் எடுக்கும் படங்கள் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று ஹிட் அடித்து லாபத்தை கொடுத்துவிட்டால் தயாரிப்பாளர் தப்பித்துவிடுவார். இல்லையெனில் தயாரிப்பாளர் தலையில் துண்டுதான். ‘ஐ’ படத்திற்கு பின் இப்போது வரை ஆஸ்கார் ரவிச்சந்திரன் படம் எடுக்கவில்லை.


இந்தியன் 3: லைக்கா நிறுவனம் தயாரித்து கமல் நடித்து வெளியான இந்தியன் 2 படமும் பாக்ஸ் ஆபிசில் தோல்வி அடைந்தது. இதனால், லைக்கா நிறுவனமே நிதி நெருக்கடியில் சிக்கியது. எனவே, ஷங்கரும், கமலுமே இந்தியன் 3 எடுப்பதில் ஆர்வம் இல்லாமல் இருக்கிறார்கள். எனவேதான், கேம் சேஞ்சர் படம் வெளியாவதற்கு முன்பு ‘இந்தியன் 3-வை முடித்து கொடுத்து கொடுக்க ஷங்கர் சம்மதம் சொன்னால் மட்டுமே கேம் சேஞ்சரை ரிலீஸ் செய்ய வேண்டும்’ என லைக்கா நிறுவனம் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுத்தது.

அந்த பேச்சுவார்தையில் கேம் சேஞ்சருக்கு பின் இந்தியன் 3 பட வேலைகளை துவங்குகிறேன் என ஷங்கர் ஒப்புக்கொண்டார். அதன்பின்னர்தான் கேம் சேஞ்சர் படம் வெளியானது. ஷங்கரிடம் இந்த முறை சிக்கியிருப்பது தெலுங்கில் அதிக பட்ஜெட் படங்களை தயாரிக்கும் தில் ராஜூ. இவர் ஏற்கனவே விஜயை வைத்து தமிழ், தெலுங்கில் வாரிசு படம் எடுத்தவர். வாரிசு படம் தெலுங்கில் ஓடவில்லை.


கேம் சேஞ்சர்: இந்நிலையில்தான் இந்த மாதம் 10ம் தேதி வெளியான கேம் சேஞ்சர் திரைப்படம் ரசிகர்களிடம் பெரிய வெற்றியை பெறவில்லை. உலகம் முழுவதும் இப்படம் முதல் நாளில் 186 கோடி வசூல் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்தாலும் அதில் உண்மையில்லை. இப்படம் 84 கோடிதான் வசூலை பெற்றது என சிலர் சொன்னார்கள். படம் வெளியாகி 3 நாட்கள் ஆகிவிட்ட நிலையில் இப்படம் இன்னமும் 100 கோடி வசூலை கூட தொடவில்லை என சொல்லப்படுகிறது.

தமிழகத்தை பொறுத்தவரை படம் வெளியாகி 3 நாட்களில் கேம் சேஞ்சர் வெறும் 6 கோடியை மட்டுமே வசூல் செய்திருக்கிறது என சொல்லப்படுகிறது. இந்த படத்தை 500 கோடி செலவு செய்து 2 வருடங்கள் எடுத்தார் ஷங்கர். 5 பாடல்கள் காட்சிகளுக்கு மட்டுமே 75 கோடி செலவு செய்தார். இதில் 15 கோடி செலவு செய்யப்பட்டு உருவான ஒரு பாடல் படத்திலேயே இடம் பெறவில்லை. இன்று முதல் அப்பாடல் சேர்க்கப்படும் என சொல்லியிருக்கிறார்கள்.

எப்படியிருந்தாலும் கேம் சேஞ்சர் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாது என்றே கணிக்கப்படுகிறது. மொத்தத்தில் இந்தியன் 2 தோல்விக்கு பின் கேம் சேஞ்சர் படமும் ஷங்கருக்கு தோல்வியையே கொடுத்திருக்கிறது.

Next Story