பாலச்சந்தருக்கு அப்புறம் ரஜினிதான்!.. கமலுக்கு இப்படி ஒரு செண்டிமெண்ட்டா?!....

By :  MURUGAN
Published On 2025-07-17 18:29 IST   |   Updated On 2025-07-17 18:29:00 IST

Rajini Kamal: நடிகர் கமல் சமீபத்தில் பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். விரைவில் பதவியேற்கும் அவர் நடிகரும், அவரின் நீண்ட வருட நண்பருமான ரஜினியை சந்தித்து தனது சந்தோஷத்தை பகிர்ந்துகொண்டார். இது தொடர்பான புகைப்படங்களை அவரே தனது சமூகவலைத்தள பக்கங்களில் பகிர்ந்திருந்தார்.

கமல் ஏதோ ரஜினியை தேடிச்சென்று அவரின் ஆசி வாங்கியது போல ரஜினி ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்கள். ஆனால், அந்த சந்தோஷத்தை பகிர்ந்துகொள்ளவே கமல் ரஜினியிடம் சென்றார் என்பதே உண்மை. கமல் இதை செய்திருக்க வேண்டிய அவசியமே இல்லை. ஆனால், ஏன் செய்தார் என்பதற்கு பின்னால் ஒரு செண்டிமெண்ட் இருக்கிறது.



கமலை விட ரஜினி 4 வயது பெரியவர். ரஜினி நடிக்க வந்த போது கமல் ஒரு ஸ்டாராக இருந்தார். தொடந்து கமலின் படங்களில் அவரின் நண்பராக ரஜினி நடித்தார். கமல், ரஜினி இருவருமே பாலச்சந்தரின் சிஷ்யர்கள். அவர் இயக்கிய படங்களில் இருவரும் இணைந்து நடித்தார்கள். ஒரு கட்டத்தில் இருவரும் தனித்தனியாக நடிக்க துவங்கினார்கள்.

சினிமாவில் போட்டி இருந்தாலும் இருவரும் நல்ல நண்பர்களாகவே இருக்கிறார்கள். ரஜினி சினிமாவுக்கு நடிக்க வந்து 50 வருடங்கள் ஆகிறது. இத்தனை வருடங்களாக ரஜினி, கமல் இருவருமே நட்பை மதித்து நடந்து கொள்கிறார்கள். சினிமாவில் இது மிகவும் அரிது. கமல் ரசிகர்களும், ரஜினி ரசிகர்களும் டிவிட்டர் போன்ற சமூகவலைத்தளங்களில் இப்போதும் சண்டை போட்டுக்கொள்கிறார்கள்.


ஆனால், கமலுக்கும் ரஜினிக்கும் இடையே இருக்கும் நட்பு பற்றி யாருக்கும் தெரியாது. ரஜினி புதிதாக என்ன முயற்சி செய்தாலும் அதை கமலிடம் சொல்லி ஆலோசனை கேட்பார். கமலுக்கு ஒரு பிரச்சனை எனில் முதல் போன் கால் ரஜினியிடமிருந்தே போகும். அதேபோல், கமலும் எந்த ஒரு புதிய விஷயத்தை செய்தாலும் ரஜினியிடம் சொல்வாராம். பாலச்சந்தர் இருந்தவரை முதலில் அவரை நேரில் பார்த்து சொல்வார். அடுத்து ரஜினியிடம் பேசுவார். இப்போது பாலச்சந்தர் இல்லை என்பதால் ரஜினிக்கு அந்த இடத்தை கமல் கொடுத்திருக்கிறாராம். பாலச்சந்தருக்கு பின் குடும்ப விஷயங்களை கமல் ரஜினியிடம் மட்டுமே பகிர்ந்துகொள்வார்.

அரசியல் கட்சி துவங்கிய போதும் கமல் ரஜினியை சந்தித்து பேசினார். மாநாடு நடத்துவதையும் ரஜினியிடம் சொன்னார். இப்போது பாராளுமன்ற எம்.பி. ஆனதையும் ரஜினியிடம் காட்டி தனது சந்தோஷத்தை வெளிப்படுத்தியிருக்கிறார் என்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள். கமல் தன்னை சந்தித்துவிட்டு சென்ற சில மணி நேரங்களில் டிவிட்டரில் அவருக்கு ரஜினி வாழ்த்து சொல்லியது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News