காதலிக்க நேரமில்லை படத்துல இவ்ளோ விஷயம் இருக்கா? இயக்குனர் சொன்ன 'வாவ்' தகவல்
தமிழ்த்திரை உலகில் காலத்தால் அழியாத பல சூப்பர்ஹிட் படங்கள் உண்டு. அவற்றில் ஒன்றுதான் காதலிக்க நேரமில்லை. தற்போது கிருத்திகா உதயநிதி இதே பெயரில் ஒரு படத்தை இயக்கியுள்ளார். ஜெயம் ரவி, நித்யா மேனன், யோகிபாபு, வினய் ராய் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு இசை அமைத்தவர் ஏ.ஆர்.ரகுமான். இக்கால இளசுகளுக்கு ஏற்ற வகையில் காதல் படமாக உருவாகி உள்ளது. வரும் பொங்கல் தினத்தன்று படம் வெளியாக உள்ளது.
ஆனால் முதன்முறையாக இந்தப் பெயரில் படத்தை இயக்கியவர் ஸ்ரீதர். இவர் 1964ல் இயக்கத்தில் ரவிச்சந்திரன், ராஜஸ்ரீ, காஞ்சனா, முத்துராமன், பாலையா, விஎஸ்.ராகவன், நாகேஷ், சச்சு உள்பட பலரது நடிப்பில் வெளியான படம் காதலிக்க நேரமில்லை. இந்தப் படத்தில் தான் கதாநாயகன் ரவிச்சந்திரன் அறிமுகம் ஆனார்.
எம்எஸ்வி. இசையில் பாடல்கள் எல்லாமே அருமையாக இருந்தன. இளம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தை மறைந்த இயக்குனர் மனோபாலா ரீமேக் செய்ய ஆசைப்பட்டார். அதற்கான உரிமையையும் வாங்கினார். அதன்பிறகு நடந்தது என்னன்னு பாருங்க.
ஸ்ரீதர் இயக்கிய காதலிக்க நேரமில்லை படம் அந்தக் காலத்தில் கல்லூரி இளைஞர்கள் மிகவும் ரசித்துப் பார்த்த படம். இந்தப் படத்தின் ரீமேக் உரிமையை வாங்கியவர் இயக்குனர் மனோபாலா. படத்தின் இயக்குனர் ஸ்ரீதரைப்; பார்க்கச் சென்றாராம் இயக்குனர் மனோபாலா.
அவருக்கு படத்தின் ரீமேக் உரிமையை வாங்கியதற்கு ஸ்ரீதர் வாழ்த்துக்கள் சொல்லி இருக்கிறார். தொடர்ந்து நடிகர்களைத் தேர்வு செய்து விட்டாயா என்று கேட்டுள்ளார். அதற்கு மனோபாலா அன்றைய காலத்தில் பிரபலமாக இருக்கும் இளம் நடிகர்களின் பெயர்களை வரிசையாக சொன்னாராம். உடனே அவரைத் தடுத்த ஸ்ரீதர், 'எல்லாம் சரி. பாலையா கேரக்டருக்கு யாரைப் போடப் போறே'ன்னு கேட்டுள்ளார்.
இதைக் கேட்டதும் ஸ்ரீதரின் முன் இருந்து மனோபாலா யோசித்துக் கொண்டே இருந்தாராம். ஆனால் பாலையா கேரக்டருக்குப் பொருத்தமாக நடிக்க யாருமே அவருக்குத் தோன்றவில்லையாம். உடனே அவர் தனது தோல்வியை ஒப்புக்கொண்டு ரீமேக் உரிமையை திரும்பவும் அவரிடமே கொடுத்து விட்டு வந்தாராம்.