விக்ரம் படத்திலிருந்து ஒரு வெப்சீரியஸ்!.. லோகேஷ் போடும் பக்கா ஸ்கெட்ச்..

கோலிவுட்டில் ஒரு முக்கியமான இயக்குனராக மாறியிருப்பவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கிய கைதி, விக்ரம் ஆகிய படங்கள் மூலம் இவருக்கு ரசிகர்களே உண்டானார்கள். விஜயை வைத்து மாஸ்டர், லியோ ஆகிய படங்களை இயக்கினார். இதனால் விஜய் ரசிகர்களுக்கு பிடித்த இயக்குனராகவும் மாறினார்.
இப்போது 50 கோடி சம்பளம் வாங்கும் இயக்குனராக லோகேஷ் ரஜினியை வைத்து கூலி படத்தை இயக்கி முடித்துள்ளார். வருகிற 14ம் தேதி வெளியாக உள்ள இப்படம் 1000 கோடிக்கும் மேல் வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தில் ரஜினியோடு நாகார்ஜுனா, அமீர்கான், சத்யராஜ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
லோகேஷின் ஒரு படத்தில் வரும் கதாபாத்திரம் அவரின் இன்னொரு படத்திலும் அதே கதாபாத்திரத்தில் வருவதை ரசிகர்கள் LCU என அழைக்கிறார்கள். விக்ரம், லியோ படங்களில் லோகேஷ் இதை செய்திருந்தார். ஆனால் ரஜினியை வைத்து இப்போது இயக்கியுள்ள கூலி LCU-வில் வராது. இது முழுக்க தனி திரைப்படம் என லோகேஷ் சொல்லியிருக்கிறார்.

கமலை வைத்து லோகேஷ் இயக்கிய விக்ரம் சூப்பர் ஹிட் அடித்தது. இந்த படத்தில் ஏஜண்ட் டீனா என்கிற ஒரு கதாபாத்திரம் வரும். ரகசிய உளவாளியான அவர் கமலின் வீட்டில் வேலைக்காரி போல இருப்பார். படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் வில்லன் குரூப்புடன் அசத்தலாக சண்டையும் போடுவார். இவரின் கதாபாத்திரம் ரசிகர்களால் சிலாகிக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த கதாபாத்திரம் பற்றி ஊடகம் ஒன்றில் பேசிய லோகேஷ் ‘ ஏஜண்ட் டீனா கதாபாத்திரத்தை வைத்து ஒரு வெப்சீரியஸை உருவாக்க திட்டமிட்டிருக்கிறோம். அதை வேறு ஒருவர் இயக்கவுள்ளார்’ என கூறியிருக்கிறார்.