நயன்தாராவிடம் இப்படி ஒரு மாற்றமா?.. ஆடிப்போன மூக்குத்தி அம்மன் 2 படக்குழு!..

ஐயா திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க தொடங்கிய நயன்தாரா ஒரு கட்டத்தில் கோலிவுட்டின் நம்பர் ஒன் நடிகையாக மாறினார். தனக்குத் தானே லேடி சூப்பர்ஸ்டார் என பட்டம் வைத்துக்கொண்டார். தான் நடிக்கும் படங்களின் டைட்டிலில் தன் பெயருக்கு முன்பு லேடி சூப்பர்ஸ்டார் என போட வேண்டும் எனவும் அழுத்தம் கொடுத்தார். திடீரென எனக்கு அந்த பட்டம் வேண்டாம் என அறிக்கை விட்டார்.
தனது திருமண ஆல்ப வீடியோவில் நானும் ரவுடிதான் பட ஷுட்டிங்கில் எடுக்கப்பட்ட சில காட்சிகளை சேர்ப்பதற்கு அப்படத்தின் தயாரிப்பாளர் தனுஷ் அனுமதி கொடுக்காத போதும் அதை வீடியோவில் சேர்த்து சர்ச்சையை உருவாக்கினார். இப்படி நயன்தாராவை சுற்றி எப்போதும் சர்ச்சைகள் தொடர்கிறது.
விக்னேஷ் சிவனை திருமணம் செய்து வாடகைத் தாய் மூலம் 2 குழந்தைகளுக்கு அம்மாவாக மாறினார். அதன்பின் நடிப்பதற்காக தன்னை தேடி வரும் தயாரிப்பாளர்களிடம் பல கண்டிஷன்களை போட்டார். சென்னையில்தான் படப்பிடிப்பு நடக்க வேண்டும், குறைவான நேரம்தான் நடிப்பேன் என சொல்லத் துவங்கினார். மேலும், தன்னோடு ஒரு பெரிய கூட்டத்தையே அழைத்து வந்து அவர்களின் சம்பளத்தை தயாரிப்பாளர் தலையில் கட்டினார்.

இதையெல்லாம் பல்லைக் கடித்துக்கொண்டு தயாரிப்பாளர்கள் பொறுத்துக் கொண்டனர். கடந்த சில வருடங்களாகவே நயன்தாரா நடிப்பில் வெளியான படங்கள் ரசிகர்களை கவரவில்லை. மேலும் விஜய், அஜித் ஆகியோரின் படங்களில் நடிக்கும் வாய்ப்பு திரிஷாவுக்கு போனது.
இந்நிலையில் மூக்குத்தி அம்மன் 2 படத்தில் நடித்துவரும் நயன்தாராவிடம் ஏற்பட்டுள்ள மாற்றத்தைப் பார்த்து படக்குழு ஆடிப்போயுள்ளதாம். ஷுட்டிங் துவங்குவதற்கு 10 நிமிடத்திற்கு முன்பு வந்துவிடுகிறாராம். கேரவனுக்குள்ளேயே போவதில்லையாம். சுந்தர்.சி என்ன சொல்கிறாரோ அதை செய்துவிட்டு கிளம்பிவிடுகிறாராம்.
ஒருவேளை முன்பு போல ஆட்டிட்டியூட் காட்டினால் வாய்ப்புகள் வராது என நினைத்து வாலை சுருட்டிக்கொண்டாரோ என்னவோ!..