கேப்டனுக்கு இதுதான் உண்மையான சந்தோஷம்!. பிரேமலதா நெகிழ்ச்சி பேட்டி!..
Vijayakanth: விஜயகாந்த் என்றால் எல்லோருக்கும் நினைவுக்கு வருவது அவரின் ஈகை குணம்தான். மதுரையில் இருந்தபோது அவரை சுற்றி எப்போதும் நண்பர் கூட்டம் இருக்கும். அவர்கள் எல்லோரையும் சினிமாவுக்கு அழைத்து செல்வது, சாப்பாடு வாங்கி கொடுப்பது என எல்லா செலவையும் அவர்தான் செய்வார்.
சினிமாவில் நடிக்கும் ஆசை வரவே தனது நண்பர் இப்ராஹிம் ராவுத்தருடன் சென்னை வந்து வாய்ப்பு தேடினார். துவக்கத்தில் சில அவமானங்களை சந்தித்தாலும் ஒரு கட்டத்தில் வாய்ப்பு வந்தது. ஆனால், அப்படி அவர் நடித்த சில படங்கள் ஓடவில்லை. அதன்பின் எஸ்.ஏ.சந்திரசேகரின் இயக்கத்தில் நடித்த சட்டம் ஒரு இருட்டறை படம் அவருக்கு வெற்றிப்படமாக அமைந்தது.
அதன்பின் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கினார். எப்போதும் எல்லோருக்கும் நல்லது செய்ய வேண்டும், தன்னால் முடிந்த உதவிகளை செய்ய வேண்டும், மற்றவர்களை மேலே தூக்கிவிட வேண்டும் என்கிற எண்ணம் எப்போதும் விஜயகாந்துக்கு உண்டு.
அதனால்தான் சினிமாவில் ஒரு நல்ல நிலைக்கு வந்ததும் தனது அலுவகத்திற்கு எப்போது யார் வந்தாலும் அவர்களுக்கு உணவு போட்டார். அவர் போட்ட சாப்பாட்டில் கஷ்டப்பட்ட பல கலைஞர்கள் உயிர் வாழ்ந்தார்கள். அதனால்தான் அவர்கள் இப்போதும் விஜயகாந்த் பற்றி நன்றியுணர்ச்சியோடு நினைவு கொள்கிறார்கள்.
நடிகர், நடிகைகளுக்கு ஒரு மாதிரி உணவு, மற்றவர்களுக்கு வேறு மாதிரி உணவு என்பதுதான் 80களில் சினிமாவில் நடைமுறையாக இருந்தது. இப்போதும் பல நிறுவனங்கள் அப்படித்தான் சாப்பாடு போடுகிறது. இதை மாற்றி ஷூட்டிங் ஸ்பாட்டில் எல்லோருக்கும் ஒரே மாதிரி உணவு என்பதை அறிமுகம் செய்ததே விஜயகாந்துதான். வேறு தயாரிப்பாளர் எனில் அதற்கான செலவை தனது சம்பளத்தை பிடித்துக்கொள்ள சொன்னவர் அவர்.
இந்நிலையில், ஊடகம் ஒன்றில் பேசிய பிரேமலதா விஜயகாந்த் ‘கேப்டனுக்கு சமைக்க தெரீயாது. ஆனால், சமையலை தாண்டி அவருக்கு ஒன்னுதான் தெரியும். அது எல்லோரையும் அமர வைத்து சாப்பாடு பரிமாறுவது அவருக்கு மிகவும் பிடிக்கும். அதில்தான் அதிக சந்தோஷப்படுவார். வீட்டிற்குக் யாராவது உறவினர் வந்தால் நான் தோசை ஊற்றுவேன். அவர்தான் அதை எடுத்துக்கொண்டு போய் பரிமாறுவார். அவர்கள் சந்தோஷமாக சாப்பிடுவதை பார்ப்பது அவருக்கு அவ்வளவு சந்தோஷம்’ என நெகிழ்ச்சியுடன் பேசினார்.