{"vars":{"id": "76339:5011"}}

காசு கொடுப்பதாக சொல்லி ஏமாற்றிவிட்டார் விஷால்!.. மகுடம் பட இயக்குனர் புகார்!....

 

தமிழில் பல புதிய இயக்குனர்களை அறிமுகம் செய்தவர் தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி. அவர் விஷாலை வைத்து படமெடுக்க ஆசைப்பட்டு சில கோடிகளை விஷாலுக்கு அட்வான்ஸாக கொடுத்திருக்கிறார். ஆனால், பல வருடங்களாகவே அவருக்கு விஷால் கால்சீட் கொடுக்கவில்லை. ஒருவழியாக அதற்கு விஷால் சம்மதித்து ஐங்கரன், ஈட்டி ஆகிய படங்களை இயக்கிய ரவி அரசு இயக்கத்தில் விஷால் நடிக்க ஆர்.பி சவுத்ரி தயாரிப்பில் மகுடம் என்கிற படம் சில மாதங்களுக்கு முன்பு துவங்கப்பட்டது.

ஆனால் விஷாலுக்கும் இயக்குனருக்கும் இடையே முட்டிக்கொள்ள சில நாட்கள் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. ஒருகட்டத்தில் ரவி அரசை படத்திலிருந்து தூக்கிவிட்டு நானே இந்த படத்தை இயக்குகிறேன் என களமிறங்கினார் விஷால். இந்த படத்தின் தயாரிப்பாளர் சவுத்ரி என்றாலும் ஃபர்ஸ்ட் காப்பி அடிப்படையில் விஷால் படத்தை எடுத்துக் கொடுப்பதாக பேசப்பட்டது. இதனால் ரவி அரசு விஷயத்தில் சவுத்ரியால் எதையும் செய்ய முடியவில்லை.

ஒருபக்கம் இது தொடர்பாக ரவி அரசு இயக்குனர் சங்கத்தில் புகார் கொடுக்க அவர்கள் தொழிலாளர் சங்கமான பெப்சியிடம் பேசி படப்பிடிப்பை நிறுத்திவிட்டனர். ரவி அரசிடம் என்.ஓ.சி பெற்றுவிட்டு படத்தை துவங்குங்கள் என விஷாலிடம் சொல்லிவிட்டனர். இதன் காரணமாக சில நாட்கள் படப்பிடிப்பு நடக்கவில்லை .

அதன்பின் ரவி அரசை அழைத்துப் பேசி அவருக்கு இரண்டரை கோடி தருவதாக வாக்குறுதி அளித்து அவரிடம் என்.ஓ.சி வாங்கி படப்பிடிப்பை மீண்டும் தொடங்கினார் விஷால். சில நாட்கள் படப்பிடிப்பு நடந்த நிலையில் பேசிய பணத்தை கொடுக்காமல் ஏமாற்றுகிறார்கள் என ரவி அரசு மீண்டும் இயக்குனர் சங்கத்தில் புகார் அளித்துள்ளார். எனவே, இயக்குனர் சங்கத்தில் ஆர்.பி.சவுத்ரி மற்றும் விஷால் ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக செய்திகள் கசிந்துள்ளது.