இப்பலாம் யாரு ஹீரோ.. யாரோ வில்லன்னே தெரியல!.. கோபத்தில் பொங்கிய எஸ்.ஏ.சி..

SA Chandrasekar: சினிமாவில் ஒருவரை ஹீரோவாக காட்ட வேண்டுமெனில் வில்லனாக ஒருவரை காட்ட வேண்டும். வில்லனை அடித்தால்தான் அவன் ஹீரோ. அதாவது வில்லன் என ஒருவன் இல்லையெனில் ஹீரோவே இல்லை, ஹீரோவுக்கும் வேலையும் இல்லை. கெட்டதை தட்டி கேட்டால்தான் அவனை ரசிகன் ஹீரோவாக பார்ப்பான். எம்.ஜி.ஆர் காலம் முதல் இதுதான் திரைப்படங்களின் ஃபார்முலா.
ஹீரோ வில்லன்: நம்பியார் இல்லையென்றால் எம்.ஜி.ஆருக்கே வேலையே இல்லை. ஹீரோயிசம் காட்டும் நடிகர்கள் நடிக்கும் எல்லா படங்களிலுமே கொடூரமான வில்லன் ஒருவன் இருப்பான். அது இந்த காலம் வரை தொடர்கிறது. வில்லனின் கதாபாத்திரம் ஃபவர்புல்லாக இருந்தால்தான் ‘வில்லனை ஹீரோ எப்படி அழிப்பான்’ என்கிற எதிர்ப்பார்பு ரசிகர்களிடம் உருவாகி அவனை படத்தோடு ஒன்றவைக்கும்.
ஹீரோ போராடி வில்லனை கொல்லும்போதுதான் ரசிகனுக்கு திருப்தி ஏற்படும். மார்க் ஆண்டனி இல்லையெனில் பாட்ஷாவே இல்லை என்பதுதான் நிஜம். அதனால்தான் பெரும்பாலான இயக்குனர்கள் வில்லன் கதாபாத்திரத்தை மிகவும் ஃபவர்புல்லாக வடிவமைக்கிறார்கள். ஹீரோ என்றால் நல்லவன், வில்லன் என்றால் கெட்டவன் என்பதுதான் காலம் காலமாக இருந்து வந்தது.
நெகட்டிவ் ஹீரோ: ஆனால், 90களில் நெகட்டிவ் ஹீரோ என்கிற கதாபத்திரங்கள் இயக்குனர்களால் உருவாக்கப்பட்டது. பில்லா மற்றும் மங்காத்தா போன்ற படங்களில் ஹீரோவே கெட்டதுதான் செய்வான். மங்காத்தா படத்தில் 500 கோடிக்காக எல்லா கெட்ட விஷயங்களையும் அஜித் செய்வார். ஆனால், ரசிகர்கள் அதை கொண்டாடினார்கள்.
லியோ விஜய்: லியோ படத்தில் கூட பிளாஷ்பேக் காட்சியில் வரும் விஜய் கெட்டவனாகத்தான் இருப்பார். ஆனால், ரசிகர்களுக்கு அது தவறாகவே தெரியவில்லை. எனவேதான், பல நடிகர்களும் நெகட்டிவ் ஹீரோவாக நடிக்க ஆசைப்படுகிறார்கள். இந்நிலையில்தான், விஜயின் அப்பாவும் இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் இது தொடர்பாக தன்னுடைய அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
ஒரு திரைப்பட நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அவர் ‘ஒருகாலத்தில் வில்லன்கள் செய்யும் எல்லா கெட்ட விஷயங்களையும் இப்போது கதாநாயகர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள். வில்லன் யார்?.. கதாநாயகன் யார்? என்பதே தெரியவில்லை. படம் பார்க்கும் இளைய சமுதாயமும் கெட்டுவிடாதா?.. இயக்குனர்களுகும், கதாசிரியர்களுக்கும் பொறுப்புணர்வு அவசியம்’ என பேசி அட்வைஸ் செய்திருக்கிறார் சீனியர் இயக்குனர்.