45 நிமிஷம் பார்த்தேன்!. கூலி படம் 1000 கோடி வசூலை தாண்டும்!.. ஹைப் ஏத்தும் நடிகர்!..

Coolie Movie: லோகேஷ் கனகராஜ் இயகத்தில் ரஜினி நடித்து வரும் திரைப்படம் கூலி. ஜெயிலர் எனும் சூப்பர் ஹிட் படம் ரஜினியை சுறுசுறுப்பாக்கி இருக்கிறது. முன்பெல்லாம் வருடத்திற்கு ஒரு படம் நடித்தவர் இப்போது கேப் விடாமல் தொடர்ந்து படங்களில் நடிக்க துவங்கிவிட்டார். ஜெயிலர் படம் ரிலீஸானதும் லால் சலாம் படத்தில் நடித்தார்.
அது முடிந்ததும் வேட்டையன் படத்தில் நடித்தார். இந்த படம் நன்றாக இருந்தும் எதிர்மறையான விமர்சனங்களால் வசூல் குறைந்து போனதாக சொல்லப்பட்டது. இந்த படம் முடித்தவுடனேயே கூலி படத்தில் நடிக்க துவங்கினார். மாநகரம், கதை, மாஸ்டர், விக்ரம், லியோ ஆகிய படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இப்படத்தை இயக்கி வருகிறார்.
லோகேஷ் கனகராஜுக்கென பெரிய ரசிகர் கூட்டமே உருவாகியுள்ளது. ஏனெனில், மாஸ்டர், விக்ரம் போன்ற படங்களின் மெகா வெற்றி அவரை கவனிக்கத்தக்க இயக்குனராக மாற்றி இருக்கிறது. இவரின் படங்களில் வரும் கதாபாத்திரங்கள் அடுத்த படங்களிலும் தொடர்ச்சியாக வருவதை எல்.சி.யூ என்கிறார்கள்.
ஆனால், கூலி படத்தில் எல்.சி.யூ இல்லை என லோகேஷ் கூறிவிட்டார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். ஏற்கனவே கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. கூலி படத்தில் நாகார்ஜுனா, சத்தியராஜ், ஸ்ருதிஹாசன், உபேந்திரா, சௌபின் சாஹிர் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். மேலும், பூஜா ஹெக்டே ஒரு பாடலுக்கு நடனமாடியிருக்கிறார்.
கமலை வைத்து லோகேஷ் இயக்கிய விக்ரம் படம் 600 கோடி வசூலை தாண்டிய நிலையில் கூலி படமும் ரஜினிக்கு ஒரு சூப்பர் ஹிட் படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படம் ஒரு பேன் இண்டியா படமாக உருவாகி வருகிறது. இந்நிலையில், லோகேஷின் நண்பரும், நடிகருமான சந்தீப் கிஷன் கூலி படம் பற்றி பேசியிருக்கிறார்.
இந்த படத்தின் 45 நிமிட காட்சிகளை பார்த்தேன். கண்டிப்பாக கூலி 1000 கோடி வசூலை அள்ளும் என சொல்லியிருக்கிறார். இதனால் கூலி படம் மீது மேலும் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.