சிங்கப்பெண்ணே: கல்யாண வீட்டில் கர்ப்பத்தைச் சொன்ன சுயம்பு... திகைத்து நிற்கும் ஆனந்தி!

சிங்கப்பெண்ணே: ஆனந்தியின் அக்கா கோகிலாவின் திருமணம் நடக்கும்போது அன்பு ஆனந்தியின் கழுத்தில் தாலியைக் கட்டுகிறான். உண்மையில் கட்டி விட்டான் என்று நினைத்தால் அது துளசி கண்ட கனவாகக் காட்டப்படுகிறது. ஆனால் நிஜத்தில் நடப்பதைப் போலவே இருக்கிறது. அதன்பிறகு கோகிலாவின் கல்யாணம் நடக்கிறது. அங்கு வரும் சுயம்பு என்ன செய்யப் போகிறான் என்பது தான் இன்றைய எபிசோடின் ஹைலைட்.
ஆனந்தியின் கழுத்தில் அன்பு தாலி கட்டப்போகும் சமயம் பார்த்து அன்பு மாமா இப்போ எல்லாருக்கும் சந்தோஷம்தானே. நான் கோகிலாவின் கல்யாணத்தை நிறுத்த வரல. அதனாலதான் கல்யாணம் நடக்கும்போது வாசல்லயே இருந்து பார்த்துக்கிட்டு இருந்தேன். கல்யாணத்தை நிறுத்துறது என் வேலை இல்லை.
அதை விட இன்னொரு முக்கியமான விஷயத்தை சொல்றதுக்கு வந்துருக்கேன் என்கிறான் சுயம்பு. அவனது பேச்சு பலருக்கும் ஆத்திரத்தை வரவழைக்கிறது. ஏ சுயம்பு இங்கே வந்து குழப்பத்தை உண்டாக்கலாம்னு நினைக்காதே. ஒழுங்கு மரியாதையா சொல்லிப்புட்டேன். இங்கே இருந்து போயிடு. நாங்க நிறைய சடங்கு எல்லாம் நடத்த வேண்டி இருக்குன்னு சொல்கிறான் அழகப்பன்.
நீங்க சடங்கை நடத்துங்க. நடத்தாமaப் போங்க. அதுக்கு முன்னாடி நான் சொல்லப்போறதை நல்லா கேளுங்க. இந்த சடங்கோட சேர்த்து இன்னொரு முக்கியமான சடங்கையும் நடத்தணும் என்கிறான் சுயம்பு. அதே நேரம் அன்பு மாமா. இவன் இப்படி சொன்னா எல்லாம் கேட்க மாட்டான். நீங்க சடங்கை நடத்துங்க. இவனை நான் பார்த்துக்கறேன்.
உனக்கு அவ்ளோ அடி வாங்குனியே பத்தலையான்னு கேட்கிறான் அன்பு. அதுக்குப் பிறகு சுயம்பு ஆனந்தியின் கர்ப்பத்தைப் பூடகமாக சொல்கிறான். இந்த வீட்டுல ஒரு வளைகாப்பையும் நடத்த வேண்டி இருக்கு. என்னடா இப்ப தானே கோகிலாவுக்குக் கல்யாணம் முடிஞ்சிருக்கு. அதுக்குள்ள வளைகாப்பான்னு நினைக்கலாம். ஆனா அது உங்க பெரிய பொண்ணுக்கு இல்ல என்கிறான்.

சுயம்பு தேவையில்லாம பிரச்சனையை உண்டாக்காதே. ஆனந்தியே எவ்வளவோ கஷ்டப்பட்டு டவுன்ல போய் சம்பாதிச்சி இந்தக் கல்யாணத்தை நடத்தி முடிச்சிருக்கு. அவளைப் பத்தி எதுவும் குறை சொல்ற வேலையை வச்சிக்காதேன்னு அழகப்பன் கோபத்தில் சொல்கிறான். உடனே சின்னப்பொண்ணு எவ்ளோ பெரிய விஷயத்தை செஞ்சிருக்குன்னு தெரியுமா? டவுன்ல போய் கஷ்டப்பட்டு நிறைய பணத்தை சம்பாதிச்சிக் கொண்டு வந்து இந்தக் கல்யாணத்தை நடத்தியிருக்கா.
ஆனா அதோட இன்னொரு வாரிசையும் கொண்டு வந்துருக்கான்னு சுயம்பு சொல்கிறான். எல்லாருமே ஆனந்தியை அதிர்ச்சியுடன் பார்க்கின்றனர். வார்டனும், அன்புவும், ரெஜினாவும், சௌந்தர்யாவும், ஆனந்தியின் அம்மா, அப்பா இருவரும் என பலரும் வியப்போடு பார்க்கின்றனர். ஆனந்தியோ செய்வதறியாது திகைத்து நிற்கிறாள். இனி என்ன நடக்கும் என்பதை நாளைய எபிசோடில் பார்க்கலாம்.