{"vars":{"id": "76339:5011"}}

சிம்பு நடிக்க வேண்டிய கதையில் விஜய் சேதுபதி!.. மணிரத்னத்தின் புது பட அப்டேட்!...

 

தமிழ் சினிமா மட்டுமில்லாமல் இந்திய அளவிலும் முக்கிய திரைப்பட இயக்குனராக பார்க்கப்படுபவர் மணிரத்னம். தமிழில் பல முக்கிய திரைப்படங்களை இவர் இயக்கியுள்ளார். இவர் இயக்கத்தில் வெளியான பாம்பே, ரோஜா, தளபதி, நாயகன், அலை பாயுதே, இருவர், கன்னத்தில் முத்தமிட்டால் உள்ளிட்ட பல படங்கள் பேசப்படும் படங்களாக இருக்கிறது. மணிரத்தினத்தின் இயக்கத்தில் நடிக்க விஜய், அஜித் போன்ற பெரிய நடிகர்களே ஆசைப்படுவதுண்டு. ஆனால் அவர்கள் இருவருக்குமே அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை அல்லது அமையவில்லை.

மணிரத்தினம் ஒரு ஹீரோவுக்காக கதை எழுதும் இயக்குனர் இல்லை. அவரின் கதைக்கு எந்த நடிகர் பொருத்தமாக இருப்பாரோ அவரை வைத்து படமெடுப்பவர். எம்ஜிஆர், கமல் ஆகியோர் முயன்றே நடக்காமல் போன பொன்னியின் செல்வன் நாவலை திரைப்படமாக எடுத்து வெற்றி பெற்றும் கட்டினார் மணிரத்தினம்.

அதன்பின் கமல்,சிம்பு ஆகியோரை வைத்து அவர் இயக்கிய தக் லைப் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. தற்போதுஅடுத்த படத்திற்கு தயாராகிவிட்டார் மணிரத்னம்.
மணிரத்னத்தின் இயக்கத்தில் செக்கச் சிவந்த வானம் மற்றும் தக் லைப் என இரண்டு படங்களில் சிம்பு நடித்துவிட்டார். அடுத்து மீண்டும் சிம்புவை வைத்து ஒரு படத்தை இயக்க திட்டமிட்டிருந்தார் மணிரத்தினம். ஆனால் வெற்றிமாறன் இயக்கத்தில் அசுரன், அடுத்து அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஒரு படம் என பிஸியாக இருப்பதால் மணிரத்தினம் படத்திற்கு சிம்புவால் கால்ஷீட் கொடுக்க முடியவில்லை.

தற்போது அந்த கதையில் விஜய் சேதுபதி நடிக்கப் போகிறார் என சொல்லப்படுகிறது. இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறது. அதோடு இந்த படத்தில் நடிக்க மதராஸி மற்றும் காந்தாரா 2 பட புகழ் ருக்மணி வசந்திடம் பேசி வருகிறார்களாம்.விரைவில் இதுபற்றி அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தில் நடிக்க வாய்ப்பு வந்ததால் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிக்கவிருந்த படத்தை தள்ளி வைத்திருக்கிறாராம் விஜய் சேதுபதி. ஏற்கனவே மணிரத்னம் இயக்கிய செக்கச் சிவந்த வானம் படத்தில் விஜய் சேதுபதி நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.