செல்வராகவனுக்கு முக்கியத்துவம் கொடுக்க காரணம்! ‘ஆர்யன்’ குறித்து விஷ்ணுவிஷால் விளக்கம்
சமீபத்தில் விஷ்ணு விஷால் நடிப்பில் ஒரு கிரைம் திரில்லர் கதையில் வெளியான திரைப்படம் ஆர்யன். பிரவீன் கே இயக்கத்தில் விஷ்ணு விஷால் தான் அந்தப் படத்தை தயாரித்தார். இதுவரை வெளியான கிரைம் திரில்லர் கதையில் இருந்து ஆர்யன் திரைப்படம் முற்றிலும் வித்தியாசமான கதையாக பார்க்கப்பட்டது. அதுவும் செல்வராகவன் தான் இந்தப் படத்தின் முக்கிய கருவாக இருந்தார்.
இதுவரை செல்வராகவனை வில்லனாக ஒரு சில படங்களில் பார்த்திருப்போம். இந்தப் படத்தில் அவருடைய கேரக்டர் பேசப்பட்ட விதம் உண்மையாகவே வித்தியாசமாக இருந்தது. சொல்லப்போனால் ஹீரோவாக நடித்த விஷ்ணு விஷாலை விட செல்வராகவனின் கேரக்டர்தான் அதிகளவு பேசப்பட்டது. நடிகை ஷ்ரதா தத்தா முதன்மை கேரக்டரில் நடித்திருந்தார்.ஏற்கனவே விஷ்ணு விஷால் நடிப்பில் கிரைம் திரில்லர் கதையில் வெளியான ராட்சசன் படம் மாதிரி இருக்குமா என அனைவரும் எதிர்பார்த்திருந்தனர்.
ஆனால் ராட்சசனை எதிர்பார்த்து வராதீங்க என முன்பே விஷ்ணு விஷால் அறிவித்திருந்தார். அவர் சொன்னதை போல ஆர்யன் திரைப்படம் வேறு ஜானரில் இருந்தது. படமும் வெளியாகி ரசிகர்களிடம் பாசிட்டிவ்வான ரெஸ்பான்ஸையே பெற்று வந்தது. இந்த நிலையில் படத்தின் இந்த வரவேற்பு படக்குழுவினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. அதனால் படக்குழு நன்றி தெரிவிக்கும் விழாவை இன்று ஏற்பாடு செய்திருந்தார்கள்.
அதில் பத்திரிக்கையாளர்கள் பல கேள்விகளை கேட்டனர். அதில் ஒரு நிருபர், ‘செல்வராகவனுக்கு ஹீரோவை விட அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்ததே? இதில் உங்க பெருந்தன்மை என்ன? அடுத்து செல்வராகவன் இயக்கத்தில் நடிக்கிறீர்களா?’ என்று விஷ்ணு விஷாலை பார்த்து கேட்டார்.
அதற்கு விஷ்ணு விஷால், ‘அப்படிலாம் இல்ல. அது என்னமோ தெரியல. கதை கேட்கும் போது புதுசா இருக்கேனு நினைக்கும் போது இது எனக்கு ஒன்னும் தப்பா தெரியல. புதுசா இருக்கணும். இன்னொரு கேரக்டரை ஓவர்டேக் செய்யணும்னு இருந்தாலும் பரவாயில்லை. கதை நல்லா இருந்தால் போதும். நீங்க எல்லாரும் எதிர்பார்ப்பீங்க. ஹீரோ மேலதான் கதை இருக்கணும். ஹீரோதான் பண்ணனும்னு. அதை உடைக்கணும்னு நான் எதிர்பார்த்தேன். அவ்ளோதான்’ என மிகப்பெருந்தன்மையாக கூறினார் விஷ்ணு விஷால்.
மேலும் ஹீரோக்களும் அதிக சம்பளம் வாங்குவதை குறைக்க வேண்டும். அது தயாரிப்பாளர்களுக்கும் நல்லது. இன்னும் பல நல்ல படங்கள் வருவதற்கும் உதவியாக இருக்கும் என கூறியுள்ளார்.