தனுஷை எச்சரிக்கும் சிவனடியார்கள்... மீண்டும் ஒரு பிரச்சனையா?
இப்போது எல்லாம் தமிழ் படங்கள் ஏராளமான பிரச்சனைகளை சந்தித்து வருகிறது. அந்த வகையில் சந்தானம் நடிப்பில் வெளியான டிக்கிலோனா படத்தில் மாற்று திறனாளிகளை இழிவுபடுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டது. அதனை தொடர்ந்து சமீபத்தில் வெளியான சபாபதி படத்தில் விவசாயிகளை அவமதித்தாக சர்ச்சை எழுந்தது.
அதேபோல் சூர்யா நடிப்பில் வெளியான ஜெய் பீம் படம் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறது. வன்னியர்களின் குறியீடான அக்னி கலசத்தை நீக்க கூறினார்கள். சரி என்று அதை நீக்கி லட்சுமி தேவி படத்தை வைத்தால் எதற்காக லட்சுமி படத்தை வைக்கிறீர்கள் என ஹெச் ராஜா கேள்வி எழுப்பினார். இப்படி மாற்றி மாற்றி ஜெய் பீம் படத்திற்கு பிரச்சனை எழுந்து வருகிறது.
இந்நிலையில் மேலும் ஒரு படம் வெளியா வதற்கு முன்பே பிரச்சனை எழுந்துள்ளது. அது வேறு யார் படமும் அல்ல. கோலிவுட்டில் டாப் நடிகராக வலம் வரும் நடிகர் தனுஷின் திருச்சிற்றம்பலம் படம் தான். மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷின் 44வது படமாக உருவாகி வரும் திருச்சிற்றம்பலம் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது.
கதை திரைக்கதை மற்றும் வசனங்களை தனுஷ் எழுதியுள்ள இப்படத்தில் இயக்குனர் பாரதிராஜா, பிரகாஷ் ராஜ், நித்யா மேனன், ராஷி கண்ணா, பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் தற்போது போஸ்ட் புரோடக்ஷன் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
விரைவில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டீசர் போன்றவை வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சிவனடியார் கூட்டம் தனுஷ் உள்ளிட்ட படக்குழுவினருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதன்படி திருச்சிற்றம்பலம் என்ற பெயரை தவறாக பயன்படுத்தினால் எதிர்ப்பு தெரிவிப்போம் என்றும், தேவாரம் திருமுறைகளில் பயன்படுத்தக்கூடிய புனிதச் சொல்லான இதை நல்ல முறையில் பயன்படுத்தி இருந்தால் மகிழ்ச்சி எனவும் கூறியுள்ளனர்.
படம் வெளியாகும் முன்பே படத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளதால் பரபரப்பு நிலவி வருகிறது. படத்தில் எந்தவித சர்ச்சை காட்சிகளும் இடம் பெறாத பட்சத்தில் படத்திற்கு பிரச்சனை எழாது என்பது மட்டும் உறுதி.