உன் காசு எனக்கு வேணாம்!.. ரஜினியின் முகத்திற்கு நேராக சொன்ன தயாரிப்பாளர்!...
Rajinikanth: அபூர்வ ராகங்கள் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கியவர் ரஜினிகாந்த். பெங்களூரில் பேருந்து நடத்துனராக வேலை பார்த்து நடிப்பின் மீது இருந்த ஆர்வத்தில் சென்னை வந்து சினிமாவில் நுழைந்தவர். பாலச்சந்தரின் அறிமுகம் கிடைத்து அவர் மூலம் சினிமாவில் அறிமுகமானவர்.
அதன்பின் கமலுடன் இணைந்து தொடர்ந்து நடித்து வந்தார். ஒருகட்டத்த்தில் இருவரும் பிரிந்து தனித்தனி பாதையில் பயணிக்க துவங்கினார்கள். ரஜினி ஹீரோவாக நடிக்க துவங்கி வசூலை குவிக்கும் சூப்பர்ஸ்டாராக மாறினார். கடந்த 40 வருடங்களுக்கும் மேல் நம்பர் ஒன் நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இப்போதும் ஜெயிலர், வேட்டையன், கூலி என பரப்பாக நடித்து ஹிட் படங்களை கொடுத்து வருகிறார்.
சினிமாவில் ஒரு நடிகர் தனியாக வளர்ந்துவிட முடியாது. இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்களின் ஆதரவு இல்லாமல் ஒரு நடிகர் பெரிய இடத்தை பிடிக்க முடியாது. ரஜினியை அறிமுகம் செய்து வைத்த பாலச்சந்தர், பைரவி படத்தில் ரஜினியை முதன் முதலில் ஹீரோவாக போட்டு படமெடுத்த இயக்குனர் பாஸ்கர், ரஜினிக்கு ஜனரஞ்சகமான கதையை எழுதி அவரை ஸ்டாராக மாற்றி ரசிகர்களிடம் கொண்டு சேர்த்த கதாசிரியர் பஞ்சு அருணாச்சலம், அந்த படங்களை இயக்கிய எஸ்.பி.முத்துராமன், ரஜினிக்குள் இருக்கும் நல்ல நடிகரை ரசிகர்களுக்கு காட்டிய இயக்குனர் மகேந்திரன் என இவர்கள் எல்லோரும் ரஜினியின் வளர்ச்சியில் முக்கியமானவர்கள்.
இது ரஜினிக்கும் தெரியும். ஆனால், கால சூழ்நிலை நடிகர்கள் சில முடிவுகளை எடுக்க வைக்கும். ரஜினியை பைரவி படத்தில் கதாநாயகனாக அறிமுகம் செய்த இயக்குனர் பாஸ்கர் ஆஸ்கர் பிலிம்ஸ் என்கிற தயாரிப்பு நிறுவனத்தை துவங்கினார். அப்போது ரஜினி பெரிய ஹீரோவாக மாறியிருந்தார்.
ரஜினியை வைத்து படமெடுக்க ஆசைப்பட்ட பாஸ்கர் அவரை சந்தித்து தன்னுடைய படத்தில் நடிக்குமாறு கேட்டார். ஆனால், ரஜினியோ ‘இப்போது நான் சின்ன நிறுவனங்களின் படங்களில் நடிப்பதில்லை’ என சொல்ல, பாஸ்கருக்கு கோபம் வந்துவிட்டது. ‘பெரிய நிறுவனங்கள் தயாரிக்கும் படங்களில் மட்டுமே நடிப்பேன் என இன்று சொல்லும் நீங்கள் அன்று ஏன் என்னை போன்ற சின்ன தயாரிப்பாளரின் படமான பைரவி படத்தில் நடித்து உங்களை வளர்த்துக்கொண்டீர்கள்?’ என கேட்டுவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார்.
காலங்கள் ஓடியது. அருணாச்சலம் படத்தில் வரும் லாபத்தை தனக்கு உதவி செய்த மற்றும் கஷ்டப்படும் சிலருக்கு கொடுத்து உதவ நினைத்த ரஜினி அந்த லிஸ்ட்டில் இயக்குனர் பாஸ்கரையும் சேர்த்தார். இதற்காக பாஸ்கரை நேரில் அழைத்து பேசினார்.
அப்போது ‘இந்த படத்தில் என் வேலை எதுவும் இல்லை. நான் இந்த படத்திற்கு கதை தருகிறேன் அல்லது முழுப்படத்தையும் நானே தயாரிக்கிறேன். அதை விட்டுவிட்டு எனக்கு பிச்சை போடுவது போல நீங்கள் செய்யும் உதவி எனக்கு வேண்டாம்’ என முகத்துக்கு நேராக பாஸ்கர் சொல்ல ரஜினி அவமானப்பட்டிருக்கிறார்.
இந்த தகவலை பாஸ்கரின் மகன் சமீபத்தில் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார்.
இதையும் படிங்க: ரஜினிக்காக கதை சொன்ன டி.ஆர்…. எப்படியாப்பட்ட படம்? இப்படியா மிஸ் பண்ணுவாரு சூப்பர்ஸ்டார்?