சின்ன வயதில் ரஜினி படத்தை பார்க்க சமுத்திரக்கனி செய்த வேலை!.. செம பிளாஷ்பேக்!..
Samuthirakani: நாடோடிகள் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக பிரபலமானவர் சமுத்திரக்கனி. இவரின் படத்தில் சமுதாயத்திற்கு தேவையான கருத்துக்கள் இருக்கும். சாட்டை படத்தில் பள்ளி ஆசிரியராக வந்து எல்லோருக்கும் பாடமெடுத்தார். ஒரு அரசு பள்ளி மாணவர்களை ஆசிரியர் எப்படி நடத்த வேண்டும் என அதில் போதனை செய்திருந்தார்.
தொடர்ந்து அடுத்த சாட்டை படமும் வந்தது. இயக்குனராக இருந்த இவர் ஒரு கட்டத்தில் நடிகராக மாறினார். ஆனால், ஒரு கட்டத்தில் சமுத்திரக்கனி என்றாலே படம் முழுக்க அறிவுரை செய்து கொண்டிருப்பார் என்கிற இமேஜ் அவர் மீது உருவானது. இதனால்தான் படம் இயக்குவதையே அவர் நிறுத்தினார்.
‘நல்ல கருத்துள்ள கதைகளை சினிமாவாக எடுத்தால் அதை பார்க்க ஆளில்லை. படத்தை வாங்க யாரும் முன்வரவில்லை. என்னை நம்பி பணம் போடும் தயாரிப்பாளர் நஷ்டமடைகிறார். அதனால்தான் நடிக்க போய்விட்டேன்’ என ஒரு பேட்டியிலேயே சொல்லியிருந்தார். இப்போது ராஜமவுலி, ஷங்கர் போன்ற பெரிய இயக்குனர்களின் படங்களில் நடிக்க துவங்கிவிட்டார்.
மேலும், தனுஷ் போன்ற நடிகர்களுக்கு அப்பாவாகவும் நடித்திருக்கிறார். அப்பா, அண்ணன், போலீஸ் அதிகாரி, வில்லன் என எந்த வேடம் கிடைத்தாலும் அதில் கலக்கி வருகிறார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் ஒரு முக்கிய நடிகராக சமுத்திரக்கனி மாறியிருக்கிறார். பல தெலுங்கு படங்களில் அவரை பார்க்க முடிகிறது.
இந்நிலையில், ஊடகம் ஒன்றில் பேசிய சமுத்திரக்கனி ஒரு ஆச்சர்யமான தகவலை பகிர்ந்துள்ளார். ‘நான் ரஜினி சாரின் தீவிர ரசிகன். எங்கள் ஊரில் நான் சிகப்பு மனிதன் படம் வெளியானபோது அதை போய் பார்க்க வேண்டும் என ஆசை. ஆனால், கையிலோ காசு இல்லை. உடனே அந்த தியேட்டர் கேண்டினுக்கு சென்று ‘அண்னே நான் முறுக்கு விக்கிறேன்’ என சொன்னேன். ஏனெனில் முறுக்கு விற்றால் இலவசமாக படம் பார்க்கலாம். தொடர்ந்து 16 நாட்கள் 4 காட்சிகள் என 64 முறை அந்த படத்தை பார்த்தேன். ஒரு ரஜினி ரசிகனாக என் வாழ்க்கையில் மறக்க முடியாத சம்பவம் அது’ என பேசியிருக்கிறார்.
நான் சிகப்பு மனிதன் திரைப்படம் விஜயின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கி 1985ம் வருடம் வெளியானது. அப்படி ரஜினி ரசிகனாக இருந்த சமுத்திரக்கனி பின்னாளில் காலா படத்தில் அவருடனே நடிக்கும் அளவுக்கு முன்னேறியதுதான் அவரின் வளர்ச்சி என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.