காதல் கோட்டை படத்தில் நடிக்க வேண்டியது இவரா?!.. இது லிஸ்ட்லயே இல்லயே!...
Kadhal Kottai: அகத்தியன் இயக்கத்தில் அஜித் - தேவயாணி நடித்து 1996ம் வருடம் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் காதல் கோட்டை, கதாநாயகனும், கதாநாயகியும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ளாமலேயே கடிதம் மூலம் காதலித்துக் கொள்வார்கள். படத்தின் இறுதிக்காட்சியில்தான் இருவரும் சந்திப்பார்கள் என்பதுதான் படத்தின் கதை. வளரும் நேரத்தில் அஜித்துக்கு காதல் கோட்டை ஒரு முக்கிய படமாக அமைந்தது. இந்த படத்திற்காக சிறந்த திரைக்கதைக்கான தேசிய விருதை அகத்தியன் வாங்கினார்.
காதல் கோட்டை படத்தில் ஹீரா, தலைவாசல் விஜய், கரண் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். தேவாவின் இசையில் எல்லா பாடல்களுமே சூப்பர் ஹிட் அடித்தது. ஆனால், இந்த படம் பல நடிகர்களை தாண்டியே அஜித்திடம் வந்தது. அது பற்றி பார்ப்போம்:
இயக்குனர் அகத்தியன் பல தயாரிப்பாளர்களிடமும் இந்த கதையை சொன்னார். ஆனால், யாருக்கும் நம்பிக்கை வரவில்லை. கதாநாயகனும், கதாநாயகியும் படம் முழுக்க சந்திக்காமலேயே இருந்தால் ரசிகர்கள் ஏற்றுகொள்ள மாட்டார்கள் என அவர்கள் நினைத்தார்கள். விஜயின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகரிடம் கூட அகத்தியன் கதை சொன்னார். அவர் சில மாதங்கள் காத்திருக்க சொன்னார். ஆனால் உடனே ஷூட்டிங் துவங்க வேண்டிய சூழ்நிலை என்பதால் விஜய் அதில் நடிக்கவில்லை.
எனவே, சீரியல் நடிகர் அபிஷேக்கை போட்டு படத்தை எடுத்தார் அகத்தியன். பல நாட்கள் படப்பிடிப்பு நடந்தநிலையில், அந்த தயாரிப்பாளருக்கும், அகத்தியனுக்கும் இடையே முட்டிக்கொண்டது. இதுபற்றி பேட்டில் ஒன்றில் சொன்ன அபிஷேக் ‘பிரச்சனை ஆனதும் நான் மும்பை சென்றுவிட்டேன். 10 மாதங்கள் கழித்து வந்து பார்த்தால் அந்த படம் தியேட்டரில் ஓடிக்கொண்டிருந்தது. அஜித் நடித்திருந்தார். படம் பார்த்துவிட்டு அழுதுவிட்டேன். என்னால் எதுவும் செய்ய முடியவில்லை’ என சொல்லியிருந்தார்.
இந்நிலையில், நடிகர் சித்தப்பு சரவணன் ஊடகம் ஒன்றில் பேசிய போது ‘காதல் கோட்டை கதை என்னிடமும் வந்தது. அகத்தியனை கூட்டிக்கொண்டு சில தயாரிப்பாளர்களிடம் கதை சொல்ல வைத்தேன். நிறைய ரயில் காட்சி இருந்ததால் அதை மாற்றி பஸ்ஸில் வைக்கலாம் என சொல்வார்கள். அதைக்கேட்டு அகத்தியன் வெளியே போய்விடுவார். ஒருமுறை அவர் கதையை கேட்டு ஒரு தயாரிப்பாளர் அட்வான்ஸும் கொடுத்தார். ஆனால், அதுவும் நடக்கவில்லை’ என சொல்லியிருக்கிறார்.
காதல் கோட்டைக்கு முன்பே அஜித்தை வைத்து வான்மதி படத்தை இயக்கியிருந்தார் அகத்தியன். அந்த படத்தை தயாரித்தது சிவசக்தி பாண்டியன் என்கிற தயாரிப்பாளர். யாரும் செட் ஆகவில்லை என்பதால் அவரிடம் பேசி அஜித்தை வைத்தே படத்தை இயக்கி ஹிட் கொடுத்தார் அகத்தியன்.