சாப்பாட்டுக்கு வழியில்ல.. காசுக்காக நடிக்க வந்தேன்!.. விஜய் சேதுபதி ஓப்பன்...

By :  Murugan
Published On 2025-07-24 11:26 IST   |   Updated On 2025-07-24 11:26:00 IST

Vijay Sethupathi

Vijay sethupathi: தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகராக இருப்பவர் விஜய் சேதுபதி. இவர் சினிமாவுக்கு வருதவற்கு முன் பல வேலைகளை செய்திருக்கிறார். சென்னை மேற்கு மாம்பலம் பகுதியில் இருந்த ஒரு ஹோட்டலில் கூட அவர் வேலை செய்ததாக ஒரு செய்தி உண்டு. குடும்ப சூழ்நிலை காரணமாக துபாய் சென்று அங்கு அக்கவுண்டண்ட் வேலை பார்த்தார். அப்போதே அவருக்கு திருமணமும் முடிந்துவிட்டது.

அதன்பின் சினிமாவில் நடிக்க வேண்டும் என ஆசைப்பட்டார். மனைவியின் சம்மதத்தோடு சினிமாவில் முயற்சிகள் செய்தார். பல தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் இயக்குனர்கள் அலுவலங்களில் போய் வாய்ப்பு கேட்டார். ஒருமுறை இயக்குனர் மிஷ்கின் இவரை ‘நீயெல்லாம் எதுக்குடா சினிமாவுல நடிக்க வந்த?’ என திட்டி அனுப்பிய சம்பவமெல்லாம் நடந்தது.

ஒருகட்டத்தில் சின்ன சின்ன வேடங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது. புதுப்பேட்டை படத்தில் கூட தனுஷுடன் இருக்கும் ரவுடிகளில் ஒருவராக நடித்திருப்பார். ஒருபக்கம், குறும்படங்களிலும் நடித்து வந்தார். அப்படித்தான் கார்த்திக் சுப்பாராஜ் அறிமுகம் கிடைக்க பீட்சா பட வாய்ப்பு கிடைத்தது. அதன்பின் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படமும் பேசப்பட்டது.


மற்ற நடிகர்களை போல இல்லாமல் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து அதில் இயல்பாக நடிப்பதுதான் விஜய் சேதுபதியின் ஸ்டைல். இப்போதுவரை அதை பின்பற்றி வருகிறார். சின்ன சின்ன வேடங்களில் நடிக்க துவங்கி ஹீரோவாக மாறி அதன்பின் விக்ரம், மாஸ்டர், ஜவான் போன்ற படங்களில் வில்லனாகவும் நடித்து அசத்தியிருந்தார். இவரின் நடிப்பில் வெளிவந்த மகாராஜா படமும் பேசப்பட்டது.

இந்நிலையில், ஊடகம் ஒன்றில் பேசிய விஜய் சேதுபதி ‘ நடிக்க வந்த புதிதில் எனக்கு சினிமாவை பற்றி எதுவுமே தெரியாது. கடன்காரர்கள் வீட்டில் வந்து நிற்பார்கள். ஒருவேளை சாப்பாட்டுக்கே வழியில்லாமல் இருந்தபோதுதான் எப்படியாவது சம்பாதிக்க வேண்டும் என்கிற எண்ணம் ஏற்பட்டது. டெலிபோன் பூத்தில் வேலை செய்தேன். டிவியில் ஹிந்தி - மலையாள படங்களுக்கு டப்பிங் பேசி 360 ரூபாய் சம்பளம் வாங்கினேன்’ என சொல்லியிருக்கிறார்.

Tags:    

Similar News