விஜய் ரீமேக் செய்ய ஆசைப்பட்ட சத்தியராஜ் படம்!.. இது நம்ம லிஸ்ட்லயே இல்லயே!....
Actor Vijay: சத்தியராஜ் - கவுண்டமணி கூட்டணியில் பல திரைப்படங்கள் உருவாகி ரசிகர்களை சிரிக்க வைத்திருக்கிறது. நடிகன், மாமன் மகள், தாய் மாமன், பிரம்மா உள்ளிட்ட பல படங்களில் சத்தியராஜும், கவுண்டமணியும் இணைந்து அலப்பறை செய்திருக்கிறார்கள். இவர்கள் இருவரும் இணைந்தால் ஒரே அதகளம்தான்.
ரசிகர்கள் தொடர்ந்து சிரித்துக்கொண்டே இருக்கலாம். அதுவும் பி. வாசுவின் படங்களில் சத்தியராஜ், கவுண்டமணியோடு இணைந்து மனோரமாவும் காமெடி செய்வார். இவர்கள் மூவரும் இணைந்து பல படங்களில் நடித்திருக்கிறார்கள். இப்போதும் அந்த படங்களின் காமெடி காட்சிகள் யுடியூப்பில் பலராலும் ரசிக்கப்பட்டு வருகிறது.
இதில் முக்கியமான படம் 1990ம் வருடம் வெளிவந்த நடிகன். இந்த படத்தில் வரும் ஒவ்வொரு காட்சியும் காமெடி சரவெடிதான். அம்மாவை காப்பாற்றுவதற்காக வேலை தேடி வரும் சத்தியராஜ் வயதான கெட்டப் போட்டு பாட்டு வாத்தியார் என பொய் சொல்லி ஊட்டியில் உள்ள மனோரமாவின் பங்களாவுக்கு வேலைக்கு போவார்.
அந்த ஊரில் போலீஸ் தேடும் பிக்பாக்கெட்டாக இருக்கும் கவுண்டமணி இதைப்பார்த்து அவரும் அதே வீட்டில் தங்கிவிடுவார். பாட்டு வாத்தியார் சத்தியராஜ் மீது மனோரமாவுக்கு காதல் வரும். ஒருபக்கம், வயதான கெட்டப்பை கலைத்துவிட்டு மனோரமாவின் தம்பி மகளான குஷ்புவை காதலிப்பார் சத்தியராஜ்.
இதற்கு இடையில் நடக்கும் குழப்பங்கள், ஒருபக்கம் குஷ்புவிடம் இருக்கும் வீடியோ கேசட்டை எடுக்க வரும் வில்லன் என படம் ஜாலியாக போகும். இந்நிலையில், பி.வாசு ஒருமுறை விஜயை வைத்து படமெடுக்க ஆசைப்பட்டு அவரிடம் ஒரு கதை சொல்லியிருக்கிறார். ஆனால், நீங்கள் நடிகன் படத்தை மீண்டும் எடுத்தால் அதில் நான் நடிக்கிறேன் என விஜய் சொல்லியிருக்கிறார்.
அந்த அளவுக்கு அந்த படத்தில் வரும் காமெடி காட்சிகள் விஜய்க்கு பிடித்திருந்தது. இதை பி.வாசுவே ஒரு விழாவில் சொல்லியிருக்கிறார். அதோடு, மனோரம்மாவும், கவுண்டமணியும் இல்லாமல் அந்த படத்தை என்னால் மீண்டும் எடுக்க முடியாது. விஜய் அப்படி கேட்டதும் 'பார்க்கலாம்' என சொல்லிவிட்டு வந்துவிட்டேன். அதன்பின் அவரை நான் சந்திக்கவில்லை’ என சொல்லியிருக்கிறார்.