பாலாவின் சேதுவாக மாற நடிகர் விக்ரம் பட்டப்பாடு.. ரத்தக்கண்ணீரே வந்துடும் போலயே!..
பாலாவின் சேது படத்தில் நடிகர் விக்ரம் சேதுவாக மாறுவதற்கு எவ்வளவு கஷ்டப்பட்டார் என்பது தொடர்பான தகவலை இந்த தொகுப்பில் பார்ப்போம்.
நடிகர் விக்ரம்:
தமிழ் சினிமாவில் இன்று மிகப்பெரிய நடிகராக வலம் வருகின்றார் விக்ரம். தொடர்ந்து வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து அதில் மெனக்கட்டு நடித்த பிரபலமானவர். இந்த இடத்தை அடைவதற்கு பல போராட்டங்களை நடிகர் விக்ரம் சந்தித்திருக்கின்றார். முதலில் 1990 ஆம் ஆண்டு வெளிவந்த என் காதல் கண்மணி என்ற திரைப்படத்தின் மூலமாக நடிகராக அறிமுகமானார். தொடர்ந்து பல தோல்விகளை சந்தித்தார்.
தனது முதல் வெற்றியை ருசிப்பதற்கு அவருக்கு 10 வருடங்கள் ஆகிவிட்டது. பல படங்களில் நடித்தாலும் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை, முன்னணி நடிகராகவும் வர முடியவில்லை. பின்னர் டப்பிங் கலைஞராகவும் பணியாற்றி வந்தார். அந்த சமயத்தில் தான் பாலாவின் கண்ணில் விக்ரம் பட்டார். அதன் பிறகு தான் விக்ரமின் வாழ்க்கை மிகப்பெரிய மாற்றத்தை சந்தித்தது.
சேது திரைப்படம்:
டிசம்பர் 10, 1999 ஆண்டு விக்ரம் எப்போதும் மறக்க மாட்டார். அன்றைய தினம் தான் சேது திரைப்படம் திரையில் வெளியானது. நேற்றோடு இந்த திரைப்படம் வெளியாகி 25 ஆண்டுகள் ஆகிவிட்டது. பாலு மகேந்திராவிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் பாலா. இவர் ஒரு கதையை எழுதி முரளியிடம் கூற அவர் ஓகே செய்தார். படத்தின் பூஜையும் நடைபெற்றது.
ஆனால் சில காரணங்களால் அந்த படம் நடக்காமல் போனது. அதன் பிறகு விக்னேஷ் ஹீரோவாக வைத்து படத்தை எடுக்கலாம் என்று முடிவு செய்தார் பாலா. அந்த முயற்சியும் தோல்வியை சந்தித்தது. அதன் பிறகு ஒரு சிலரால் விக்ரமின் நட்பு பாலாவிற்கு கிடைக்க இருவரும் இணைந்து சேது படத்தை துவங்கினார்கள்.
1997 ஆம் ஆண்டு சேது படம் தொடங்கியது. ஆனால் படத்தை முடிக்க இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. FEFSI பிரச்சனை, நிதி பிரச்சனை போன்ற சிக்கலில் பலமுறை இந்த படம் தடைபட்டது. இரண்டு வருடங்களும் விக்ரம் அதே கெட்டப்பில் கடுமையான டயட்டில் இருந்து வந்தார். சப்பாத்தி, ஜூஸ், முட்டை வெள்ளை கரு ஆகியவைதான் அவரின் உணவாக இருந்தது.
மொட்டை அடித்து கருப்பாக மாற வேண்டும் என்பதற்காக சூரிய ஒளியின் நின்று தன்னைத்தானே வருத்தி இரண்டு வருடம் கஷ்டப்பட்டார் நடிகர் விக்ரம். இந்த இரண்டு வருடமும் அவர் வேறு எந்த படத்திலும் கமிட்டாகவில்லை. இப்படம் கண்டிப்பாக தனது கெரியரில் ஒரு முக்கிய படமாக இருக்கும் என்பதை நம்பினார் விக்ரம்.
மறுபக்கம் பாலா அவரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய அமீர், சசிகுமார் உட்பட அனைவரும் இப்படத்தை எப்படியாவது எடுத்து முடித்து விட வேண்டும் என்று முயற்சி செய்தார்கள். ஒரு வழியாக பலகட்ட போராட்டத்திற்குப் பிறகு இந்த படத்தை முடித்துவிட்டனர். ஆனால் படத்தை வாங்குவதற்கு யாருமே வரவில்லை.
பல பேருக்கு இந்த படத்தை போட்டு காட்டியும் படத்தின் கிளைமாக்ஸில் யாருக்கும் உடன்பாடு இல்லாததால் இந்த படத்தை வாங்குவதற்கு முன் வரவில்லை. ரிலீசுக்கு முன்பே சுமார் 100 முறை சேது படத்தை பலருக்கும் போட்டு காட்டி இருப்பார் பாலா. இந்த திரைப்படத்தை வெளியிடுவதற்குள் நடிகர் விக்ரமும் பாலாவும் படாத பாடுபட்டார்கள்.
ஒரு வழியாக 1999 ஆம் ஆண்டு இந்த திரைப்படத்தை வெளியிடுவதற்கு ஒரு விநியோகிஸ்தர் முன் வந்தார். படத்தை ரிலீஸ் செய்த போது திரையரங்கில் படத்தை பார்ப்பதற்கு ஆள் இல்லை. படம் பார்த்த சிலர் தொடர்ந்து பாசிட்டிவான விமர்சனங்களை கொடுக்க கொடுக்க படம் பிக்கப் ஆக தொடங்கியது. ஒரு வாரத்தில் இந்த திரைப்படம் நல்ல வரவேற்பு பெற தொடங்கியது. அதன் பிறகு படம் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தது. இந்த திரைப்படத்திற்கு பிறகு தான் நடிகர் விக்ரமின் திறமை பலருக்கும் தெரியவந்தது.