இளமைத் துடிப்பில் எம்ஜிஆரை அவமதித்த நடிகை... 27 வருடங்களுக்குப் பிறகு மன்னிப்பு கேட்டுள்ளாரே!

எம்ஜிஆர் தொடர்ந்து ராஜா, ராணி கதை அம்சம் கொண்ட படங்களிலேயே நடித்து வந்தார். அதன்பிறகு முதன்முதலாக சமூக கதை அம்சம் கொண்ட படத்தில் நடித்தார். அப்படி அவர் நடித்த முதல் படம்தான் தாய் மகளுக்குக் கட்டிய தாலி.
1959ல் வெளியானது. அறிஞர் அண்ணா கதை எழுதினார். அவரது தொண்டர் ராம அரங்கண்ணல் சினிமாவிற்கேற்ப திரைக்கதை எழுதினார். ஆர்.ஆர்.சந்திரன் இயக்கினார். சாதிபாகுபாடுக்கு சவுக்கடி கொடுக்கும் கதை.
இந்தப் படத்தில் கதாநாயகி ஜமுனா. இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடந்த போது ஜமுனா கால் மேல் கால் போட்டு அமர்ந்து கொண்டு இருந்தார். அப்போது எம்ஜிஆர் வந்து கொண்டு இருந்தார். அப்போது ஒருவர் 'என்னம்மா எம்ஜிஆர் வந்து கொண்டு இருக்கிறார். நீங்கள் கால் மேல் கால் போட்டு அமர்ந்து இருக்கிறீர்களே...' என்றார்கள். அப்படி சொன்னவரைக் கோபத்துடன் முறைத்துப் பார்த்தார் ஜமுனா. அதன்பிறகும் கால் மேல் கால் போட்டுத்தான் அமர்ந்து இருந்தார் ஜமுனா.
இதை எம்ஜிஆர் கண்டும் காணாதது போல சென்றுவிட்டார். அந்தப் படம் தோல்விப்படமாகவே அமைந்தது. சொல்லப்போனால் ஜமுனா ஒரு ராசியில்லாத நடிகை என்றே சொல்லப்பட்டார். அதற்கு அடுத்து எம்ஜிஆர் நடித்த படங்களில் ஜமுனாவின் பெயர் கதாநாயகிக்கு பரிந்துரைக்கப்படும்போது எம்ஜிஆர் மறுயோசனை இன்றி மறுத்துவிட்டார்.
எம்ஜிஆருடன் ஒரே படத்தில் மட்டும் கதாநாயகியாக நடித்த நடிகைகளின் பட்டியலில் ஜமுனாவும் இடம்பிடித்தார். பிற்காலத்தில் அம்மா நடிகையாகவும் மாறினார். அதே சமயத்தில் எம்ஜிஆர் முன்னணி நடிகராக வலம் வந்து அரசியலில் ஜெயித்து முதல்வர் ஆனார். அதன்பிறகு ஒரு நாள் எம்ஜிஆர் முதல்வராக இருந்தபோது நடந்த ஒரு சினிமா நிகழ்வில் ஜமுனாவும் கலந்து கொண்டார்.
'நான் எம்ஜிஆருடன் இணைந்து நடித்த காலகட்டத்தில் சிறு வயது பெண். அப்போது எனக்கு அவ்வளவாக பக்குவம் இல்லை. அதனால் புரட்சித்தலைவரிடம் மரியாதை இல்லாமல் நடந்து கொண்டேன். அதை நினைத்துப் பல நாள்கள் வருத்தப்பட்டேன். ஆனால் அதை எம்ஜிஆர் பெரிதாகப் பொருட்படுத்தவில்லை.
இருந்தாலும் இப்போது அவரிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்' என்றார். அதன்பிறகு எம்ஜிஆர் பேசும்போது 'சினிமாவில் பெரியவர், சிறியவர் என்று யாருமில்லை. எல்லாருக்கும் சம மரியாதை கொடுத்து பேசுவது நல்லது' என்றார். இதன்படி ஜமுனா தான் செய்த தவறுக்காக 27 வருடங்கள் கழித்து எம்ஜிஆரிடம் மன்னிப்பு கேட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.