தளபதி படத்தில் மணிரத்னம் என்னை அழ வச்சாரு!.. பல வருடங்கள் கழித்து சொன்ன ஷோபனா!...
Thalapathy: 80களில் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கியவர் ஷோபனா. சிவாஜியுடன் பல படங்களிலும் நடித்த நடிகை பத்மினியின் நெருங்கிய உறவினர் இவர். இவரின் குடும்பமே பரத நாட்டியத்திற்கு பெயர் போனவர்கள். ஷோபனாவும் அற்புதமாக பரதநாட்டியம் ஆடுவார். 80களில் கமல், ரஜினி, விஜயகாந்த், சத்தியராஜ் என பலருக்கும் ஜோடியாக நடித்துள்ளார்.
ரஜினியுடன் சிவா, தளபதி ஆகிய படங்களிலும், கமலுடன் எனக்குள் ஒருவன் உள்ளிட்ட சில படங்களிலும் நடித்திருக்கிறார். விஜயகாந்துடன் பொன்மன செல்வன், பாட்டுக்கு ஒரு தலைவன் ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். நாட்டியத்தின் மீது இருந்த ஆர்வத்தில் அதற்காக தனது வாழ்க்கையையே ஷோபனா தியாகம் செய்துவிட்டார்.
அதாவது ஷோபனா இதுவரை திருமணமே செய்து கொள்ளவில்லை. பல நாடுகளுக்கும் சென்று நாட்டிய நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். அவ்வப்போது திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். பிரபாஸ், அமிதாப்பச்சன், கமல் ஆகியோர் நடித்து வெளியான கல்கி 2898 படத்திலும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.
மணிரத்னம் இயக்கத்தில் ரஜினிக்கு ஜோடியாக ஷோபனா நடித்திருந்த திரைப்படம் தளபதி. ரஜினி ரசிகர்களுக்கு எப்போதும் ஃபேவரைட்டாக இருப்பது இந்த படம். இந்த படத்தில் ரஜினியை வித்தியாசமாக நடிக்க வைத்திருப்பார் மணிரத்னம். இந்த படத்தின் படப்பிடிப்பு நடக்கும்போது மணிரத்னம் எதிர்பார்ப்பதை செய்ய முடியாமல் ரஜினியே தடுமாறினார்.
அதன்பின் கமலின் அறிவுரைப்படி மணிரத்னத்தை நடித்து காட்ட சொல்லி அப்படியே நடித்தார். அதேபோல், ஷோபனாவுக்கும் நல்ல வேடம் அமைந்தது. ரஜினியும், ஷோபனாவும் வரும் காட்சிகள் சிறப்பாக அமைக்கப்பட்டிருந்தது. மேலும், சுந்தரி கண்ணால் ஒரு சேதி பாடல் இளையராஜாவின் சிறந்த மெலடி பாடலாக அமைந்தது.
இந்நிலையில் ஊடகமொன்றில் பேசிய ஷோபனா ‘ தளபதி படத்தில் நடிக்கும்போது எனக்கு 20 வயது. மலையாளத்தில் 20 நாட்களில் ஒரு படம் முடிந்துவிடும். ஆனால், தளபதி படத்தை அதிக நாட்கள் எடுத்தார் மணிரத்னம். நான் கொடுத்த கால்ஷீட்டை தாண்டி போனது. மணிரத்னம் வருவாரு. ‘இன்னும் கொஞ்சம் ஷூட் பண்ணனும். இன்னைக்கு வேண்டாம். நீங்க நாளைக்கு வீட்டுக்கு போகலாம்’ என சொல்லுவார். இப்படியே சொல்லி சொல்லி 2 நாட்கள் போய்விட்டது. ஒரு கட்டத்தில் நான் அழுதே விட்டேன்’ என சொல்லியிருக்கிறார்.