மணிகண்டனின் வாழ்க்கையை மாற்றிய ஆட்டோ ஓட்டுனர்!.. எல்லாமே மாறிப்போச்சி!...

by Murugan |
மணிகண்டனின் வாழ்க்கையை மாற்றிய ஆட்டோ ஓட்டுனர்!.. எல்லாமே மாறிப்போச்சி!...
X

Manikandan: திரையுலகில் சாமானியர்கள் கால் பதித்து வெற்றிகளை பெறுவது என்பது அவ்வளவு சுலபமில்லை. திறமை, நம்பிக்கை, கடுமையான உழைப்பு, வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்வது என எல்லாம் சரியாக அமையவேண்டும். அப்படி தற்போது கவனிக்கப்படும் நடிகராக மாறியிருப்பவர்தான் மணிகண்டன். நடிகர், கதாசிரியர், இயக்குனர் என இவருக்கு பல முகங்கள் உண்டு.

வசனகர்த்தா: நண்பர்களுடன் சேர்ந்துகொண்டு யுடியூப்பில் வீடியோக்களை போட்டு வந்தார். சில திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்கள் கிடைத்தது. விஜய் சேதுபதியும், மாதவனும் நடித்த விக்ரம் வேதா படத்திற்கு வசனம் எழுதினார். பீட்சா 2, நேற்று இன்று நாளை உள்ளிட்ட சில படங்களில் உதவி இயக்குனராகவும் வேலை செய்திருக்கிறார்.

ஜெய்பீம் ராஜாக்கண்ணு: இவர் நடிப்பில் 8 தோட்டாக்கள், காலா, நெற்றிக்கண், ஜெய் பீம் போன்ற திரைப்படங்கள் கவனிக்கப்பட்டது. அதிலும் ஜெய்பீம் படத்தில் ராஜாக்கண்ணு வேடத்தில் அசத்தலான நடிப்பை கொடுத்து அப்ளாஸ் வாங்கினார். குட் படம் மூலம் கதையின் நாயகனாக மாறினார். அந்த படம் ஹிட் அடிக்கவே லவ்வர், குடும்பஸ்தன் போன்ற படங்களில் நடித்தார். எல்லாவே அவருக்கு வெற்றிப்படங்களாக அமைந்துவிட்டது.


ஆட்டோ ஓட்டுனர்: இந்நிலையில், சமீபத்தில் ஊடகம் ஒன்றில் பேசிய மணிகண்டன் ‘ஒரு சமயம் அதிகமான மன உளைச்சலில் இருந்தேன். ஒரு ஷேர் ஆட்டோவில் சென்று கொண்டிருந்த போது ஆட்டோ ஓட்டுனரிடம் பேச்சு கொடுத்தேன். அப்போது அவர் ‘இந்த ஆட்டோ ஓட்டுறது எனக்கு பிடிக்கவே இல்லண்ணா..

சம்பாதிக்கிறது எதுவும் கையில் நிக்க மாட்டேங்குது. பொண்டாட்டியையும், குழந்தைங்களையும் சொந்த ஊருக்கே அனுப்பிட்டேன். அங்க எனக்கு நிலம் இருக்கு. அதுல கீரை போட்டிருக்கேன். ஒரு நல்ல மோட்டார் வாங்கணும். அதுக்காகத்தான் ஆட்டோ ஓட்டிக்கிட்டு இருக்கேன். அந்த காசை சம்பாதிச்சிட்டேன்னா என் ஊருக்கு போயிடுவேன். அதுக்கப்புறம் நான் ராஜா.. என் ஃபிரெண்ட்ஸோட ஜாலியா இருப்பேன்’ என சொன்னார்.

நம்பிக்கை: அவருக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அதை என்னிடம் அவர் சொல்ல வேண்டிய அவசியமும் இல்லை. நம்பிக்கையோடு வாழ்வது எப்படி என அவர் எனக்கு சொல்லி கொடுத்திருக்கிறார் என்பதை புரிந்துகொண்டேன். என் மனநிலையே மாறிப்போனது. மீண்டும் நம்பிக்கையோடு உழைத்தேன்’ என சொல்லியிருக்கிறார்.

Next Story