கமலையும் இளையராஜாவையும் கதறி அழ வைத்த சிறுவர்கள்!.. ஒரு பிளாஷ்பேக்!...
Kamal Ilayaraja: கமலும், இளையராஜாவும் ஒருவரை ஒருவர் மதிக்கும் நல்ல நண்பர்கள். இசையில் இளையராஜாவை கமல் வியந்து பார்த்தால், நடிப்பில் கமலை இளையராஜா வியந்து பார்க்கிறார். இருவரும் ஒருவரை பரஸ்பரம் புரிந்தும் வைத்திருக்கிறார்கள். பலரிடமும் சீறும் இளையராஜா கமலிடம் எப்போதும் அன்பாகவும், மரியாதையாகவே பேசுவார். அது கமல் மீது அவர் வைத்திருக்கும் மரியாதை.
இளையராஜா கமல் கூட்டணி: தமிழ் சினிமா உலகம் கமலை சரியாக கொண்டாடவில்லை என சில பேட்டிகளில் இளையராஜவே சொல்லி இருக்கிறார். 80களில் கமலின் எல்லா திரைப்படங்களுக்கும் இசையமைத்தவர் இளையராஜாதான். கமலின் பல படங்களுக்கு அற்புதமான மனதை மயக்கும் மெலடி பாடல்களை இளையராஜா கொடுத்திருக்கிறார்.
ஹே ராம் திரைப்படம்: அந்த பாடல்களை 70 மற்றும் 80 கிட்ஸ்கள் இன்னமும் கேட்டு ரசித்து வருகிறார்கள். கமல் இயக்கிய ஹே ராம் படத்திற்கு முதலில் வேறு ஒருவர் இசையமைப்பதாக இருந்தது. ஆனால், கமலுக்கு அவருடன் மனக்கசப்பு ஏற்பட்டது. எனவே, இளையராஜாவிடம் போனார். ஏற்கனவே பாடல் காட்சிகளை கமல் எடுத்துவிட்டார். எனவே, எடுத்த காட்சிகளுக்கு இசையமைத்தரர் இளையராஜா.
ராஜ பார்வை: அப்படி உருவான ‘நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி’ மற்றும் ‘இசையில் துவங்குதம்மா’ போன்ற பாடல்கள் சூப்பர் மெலடி பாடல்களாக அமைந்தது. கமலின் 100வது திரைப்படம் ராஜபார்வை. கமல் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தை துவங்கி முதலில் தயாரித்த திரைப்படம் இது. இந்த படத்தில் கண் பார்வை இல்லாதவராக கமல் நடித்திருந்தார்.
கமல் இளையராஜா கண்ணீர்: இந்நிலையில், சமீபத்தில் இளையராஜாவும், கமலும் கலந்துகொண்ட ஒரு விழாவில் பேசிய கமல் ‘ராஜ பார்வை படம் உருவானபோது நானும் இளையராஜாவும் கண்பார்வையற்ற சிறுவர்கள் படிக்கும் ஒரு பள்ளிக்கு சென்றோம். நாங்கள் இருவரும் வருவது தெரிந்ததும் அவர்கள் எங்களுக்காக ஒரு பாடலை பாடினார்கள். அதைப்பார்த்து எனக்கும், ராஜாவுக்கும் கண்ணீரே வந்துவிட்டது. நான் ஒருபக்கம், அவர் ஒருபக்கம் திரும்பி அழுது கொண்டிருந்தோம்.
நாங்கள் இருவரும் அழுவதை கண்டு அந்த ஆசிரியர் ஒரு சிறுவனிடம் சென்று ஏதோ பேசினார். அதன்பின் அந்த சிறுவன் எங்களிடம் ‘நான் ஒரு ஜோக் சொல்லட்டுமா?’ என கேட்க எங்களுக்கு இன்னமும் அழுகை வந்தது. எங்களால் ஆறுதல் படுத்தவே அந்த சிறுவன் ஜோக் சொல்ல வந்தாலும் அதுவே எங்களை மேலும் அழ வைத்தது’ என சொல்லி இருக்கிறார்.
அந்தி மழை பொழிகிறது: இந்த படத்தில்தான் ‘அந்தி மழை பொழிகிறது ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது’ என்கிற அற்புதமான மெலடி பாடலை இளையராஜா உருவாக்கி ரசிகர்களுக்கு கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.