நீயெல்லாம் சினிமாவுல நடிக்கணுமா?! போடா!.. விரட்டிய நடிகரை மேடையிலேயே வச்சு செய்த ரஜினி....
Rajinikanth: பெங்களூரில் பேருந்து நடத்துனராக வேலை பார்த்து நடிப்பின் மீது ஆர்வம் ஏற்பட்டு சென்னை வந்து நடிப்பு கல்லூரியில் படித்தவர் ரஜினிகாந்த். அந்த கல்லூரிக்கு இயக்குனர் பாலச்சந்தர் சிறப்பு விருந்தினராக வந்தபோது ரஜினியை பார்த்து இவரை நடிக்க வைக்கலாம் என்கிற எண்ணம் அவருக்கு ஏற்பட்டது. அப்படித்தான் அபூர்வ ராகங்கள் படத்தில் ரஜினி அறிமுகமானார்.
அதன்பின் தொடர்ந்து பாலச்சந்தரின் படங்களில் நடித்து வந்தார். பெரும்பாலும் கமல் ஹீரோவாக இருப்பார். ரஜினி அவருக்கு நண்பராக நடிப்பார். பெரும்பாலும் ரஜினிக்கு வில்லன் வேடங்களே கிடைத்தது. வில்லன் வேடம் ரஜினிக்கு அல்வா சாப்பிடுவது போல. பல படங்களில் வில்லனாக கலக்கினார்.
அதன்பின் ஹீரோவாக நடிக்க துவங்கி அதிலும் கொடியை நாட்டினார். ஒருகட்டத்தில் தமிழ் சினிமாவின் வசூல் சக்கரவர்த்தியாக மாற அவருக்கு சூப்பர்ஸ்டார் பட்டமும் கிடைத்தது. இப்போது 72 வயது ஆகியும் ஹீரோவாக நடித்து வருகிறார். இந்திய சினிமா உலகில் இந்த வயதில் அதிக வசூலை கொடுக்கும் படங்களில் நடித்து வரும் வயதான நடிகர் ரஜினி மட்டுமே. அவரின் கூலி படம் ரிலீஸுக்கு முன்பே 500 கோடி வியாபாரத்தை தொட்டிருக்கிறது.
ரஜினி எப்போதும் பழசை மறந்தது இல்லை. சினிமாவில் நடிக்க துவங்கியபோது பல அவமானங்களை சந்தித்திருக்கிறார். அந்த எல்லா அவமானங்களுக்கும் தொடர் வெற்றியை பதிலாக கொடுத்தார். கர்நாடகாவில் மொழி மீது அதிக பற்றுகொண்டவர்கள் இருக்கிறார்கள். சமீபத்தில் கூட கமல்ஹாசன் கன்னட மொழி பற்றி பேசியதால் அவரின் தக் லைப் படம் அங்கு வெளியாகவில்லை.
ஆனால், பல வருடங்களுக்கு முன்பே கர்நாடகாவை சேர்ந்தவர்களுக்கு ரஜினி பாடம் எடுத்த சம்பவம் பற்றி இயக்குனர் ஆர்.வி.உதயகுமார் ஒரு விழாவில் பேசியிருக்கிறார். அப்போது நான் இயக்குனர் ஆகவில்லை. கன்னட சினிமா துவங்கி 50 வருடங்கள் ஆகிவிட்டதை கொண்டாடும் விழாவில் கலந்துகொள்ள நான் பெங்களூர் சென்றிருந்தேன். அந்த நிகழ்ச்சியில் அப்போது சூப்பர்ஸ்டாராக இருந்த ராஜ்குமார், விஷ்ணுவர்தன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். தமிழ்நாட்டில் இருந்து ரஜினி, சவுகார் ஜானகி உள்ளிட்ட சிலரும் வந்திருந்தனர்.
அந்த மேடையில் சவுகார் ஜானகி தமிழில் பேசினார். அதற்கு அங்கிருந்த சிலர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து ‘கன்னடத்தில் பேசு’ என கத்தினார்கள். உடனே ராஜ்குமார் ‘நம்மை தமிழ் சினிமா உலகம் மதிக்கிறது. அவர்கள் நமக்காக இங்கே வந்திருக்கிறார்கள். நாமும் அவர்களை மதிக்க வேண்டும். இப்போது ரஜினி பேசுவார்’ என சொல்லிவிட்டார்.
அடுத்து ரஜினி பேசினார். அவர் பேச்சை கண்டு வியந்து போனேன். கன்னடத்தில் பேசிய ரஜினி ‘என்னைப்பார்த்து நீ கருப்பா இருக்கே. நீயெல்லாம் சினிமாவுல நடிக்கணுமா?. போடா’ என ராஜ்குமார் என்னை விரட்டிவிட்டார். என்னை பாலச்சந்தர்தான் நம்பி வாய்ப்பு கொடுத்தார். மொழி என்பது நமக்கு தோன்றுவதை மற்றவர்களுக்கு சொல்ல பயன்படும் ஒரு கருவி மட்டுமே. அதை கடவுளாக பார்க்காதீர்கள். எந்த மொழியிலும் பேசலாம். நமக்கு புரிந்தால் போதும்’ என அவர் பேச மொத்த கூட்டமும் அமைதியாகிப்போனது.
அதற்கு முன்பு சிவாஜியின் ரசிகனாக இருந்த நான் அன்று முதல் ரஜினி ரசிகனாக மாறிவிட்டேன். பல வருடங்களுக்கு முன்பே ரஜினி அப்படி பேசினார்’ என ஆர்.வி.உதயகுமார் பேசியிருந்தார்.