யாருய்யா ரஜினி - கமல்?!.. கோபத்தில் கத்திய இயக்குனர்!.. அந்த படத்துக்கு இதெல்லாம் நடந்துச்சா!..

by Murugan |   ( Updated:2025-01-04 08:40:26  )
யாருய்யா ரஜினி - கமல்?!.. கோபத்தில் கத்திய இயக்குனர்!.. அந்த படத்துக்கு இதெல்லாம் நடந்துச்சா!..
X

Rajini Kamal : ரசிகர்களிடம் ஒரு நடிகர் பிரபலமாவதற்கு அவர் எந்த மாதிரியான படங்களில் நடிக்கிறார்?. யாருடைய இயக்கத்தில் நடிக்கிறார்?.. என்ன மாதிரியான கதாபாத்திரங்களில் நடிக்கிறார்?.. அவரின் கதாபாத்திரம் ரசிகர்களிடம் பிரபலமாகிறதா? ஆகியவை முக்கிய காரணங்களாக இருக்கும். இது எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமல் போன்ற எல்லா நடிகர்களுக்கும் பொருந்தும்.

அவர்கள் ஏற்று நடித்த கதாபாத்திரங்கள்தான் ரசிகர்களிடம் அவர்கள் மீது ஒரு இமேஜை உருவாக்கியது. அவர்கள் நடிக்கும் படங்கள் வெற்றியடைந்து பேசப்பட்டால் மற்ற இயக்குனர்களும் அந்த நடிகர்களை வைத்து படமெடுக்க முன் வருவார்கள். சில சமயம் சில திரைப்படங்கள் மொத்த சினிமா உலகையும் புரட்டி போட்டுவிடும்.


அப்படிப்பட்ட படம்தான் பதினாறு வயதினிலே. பாரதிராஜா இயக்கத்தில் ரஜினி, கமல், ஸ்ரீதேவி நடித்து 1977ம் வருடம் வெளிவந்த திரைப்படம் இது. இளையராஜாவின் அற்புதமான இசையில் பாடல்களும் சூப்பர் ஹிட் ஆனது. அப்போது எல்லா படங்களுமே ஸ்டுடியோவில் மட்டுமே எடுக்கப்பட்டு வந்தது. பாரதிராஜா வயல் வரப்பையும், கிராமத்து மனிதர்களையும் காட்டி படமெடுத்திருந்தார்.

இந்த படத்தை பார்த்தபின் எம்.ஜி.ஆரே ‘இனிமேல் என் படமெல்லாம் ஓடாது’ என சொன்னார் என்பது பலருக்கும் தெரியாது. இந்நிலையில்தான் இயக்குனர் பி.வாசு ஒரு முக்கிய தகவலை பகிர்ந்துகொண்டார். இயக்குனர் ஸ்ரீதரிடம் நானும், சந்தானபாரதியும் உதவி இயக்குனர்களாக வேலை செய்து கொண்டிருந்தபோதுதான் பதினாறு வயதினிலே படம் வந்தது. அந்த படம் எங்களுக்குள் பெரிய பாதிப்பை ஏற்படுத்திவிட்டது.


அப்போது ஸ்ரீதர் சார் இளமை ஊஞ்சலாடுகிறது என்கிற படத்தை இயக்கவிருந்தார். அந்த படத்தில் கமலையும், ரஜினியையும் கொண்டு வரவேண்டும் என நாங்கள் நினைத்தோம். ஆனால், இதை ஸ்ரீதர் சாரிடம் எப்படி சொல்வது என தெரியவில்லை. ஆனாலும், தைரியத்தை வரவழைத்துக்கொண்டு அவரிடம் சென்று பேசினோம். முதலில் ‘ரஜினி, கமல் யார்?’ என கேட்டார். ஸ்ரீதர் சார் எந்த இயக்குனரின் படத்தையும் பார்க்க மாட்டார். எனவே, பதினாறு வயதினிலே படத்தையும் அவர் பார்க்கவில்லை.

எனவே, அந்த படம் பற்றியும் ரஜினி, கமல் பற்றியும் அவரிடம் சொன்னோம். அவருக்கு கோபம் வந்துவிட்டது. ‘என் படத்தில் யார் நடிகர்கள் என்பதை நீங்கள் முடிவு செய்கிறீர்களா?’ என கத்தினார். எனவே, அவரின் மனைவியிடம் சென்று இதுபற்றி பேசினோம். ‘நான் பேசுகிறேன்’ என அவர் சொன்னார்.


அடுத்த நாள் அழைத்து ‘உங்களுக்கு ரஜினி, கமல் தெரியுமா?. அவர்களிடம் பேச முடியுமா?’ எனக்கேட்டார். பாரதி ‘எனக்கு கமலை தெரியும். அவர் என்னுடன் படித்தவர்’ என சொன்னார். நான் ‘எனக்கு ரஜினியை தெரியும். என் வீட்டில் அருகில்தான் இருக்கிறார்’ என சொன்னேன். அப்போது ரஜினி புதுப்பேட்டையில் ஒரு சின்ன அறையில் தங்கியிருந்தார். நான் சென்று ரஜினியிடம் பேசியதும் ‘ஸ்ரீதர் சார் என்னை கூப்பிட்டாரா?’ என ஆச்சர்யப்பட்டார். அதன்பின் இளமை ஊஞ்சலாடுகிறது படத்தில் கமலும், ரஜினியும் நடித்தார்கள்’ என பி.வாசு சொல்லியிருந்தார்.

பின்னாளில் இதே பி.வாசு இயக்கத்தில் ரஜினி பணக்காரன், உழைப்பாளி, மன்னன், சந்திரமுகி, குசேலன் உள்ளிட்ட படங்களில் நடித்தது குறிப்பிடத்தக்கது.

Next Story