16வயதினிலே படத்துக்கு ரஜினி கேட்ட சம்பளம்... படிப்படியாகக் குறைத்த பாரதிராஜா!
எளிமை மனிதரின் 70வது பிறந்தநாள் விழா என்ற பெயரில் ரஜினியின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவில் இயக்குனர் இமயம் பாரதிராஜா கலந்து கொண்டு பல தகவல்களைச் சொன்னார். ரஜினி குறித்து அவர் சொன்னதுல சிலவற்றைப் பார்ப்போம்.
அறிவாளியைக் கண்டுபிடித்து விடலாம். விஞ்ஞானியைக் கண்டுபிடித்து விடலாம். மனிதனைக் கண்டுபிடிப்பது கஷ்டம். அப்படி ஒரு மனிதன்தான் சூப்பர் நடிகர் ரஜினிகாந்த்.
ஒரு எளிமை மனிதன். இன்றுவரை தன்னுடன் பணியாற்றும் ஒரு சிறுவனைக்கூட தரக்குறைவாகப் பேச மாட்டார். கோபத்தில் கூட கௌரவமாக அழைத்துச் சொல்வார். இதுவரை அடுத்தவரைக் காயப்படுத்தாத ஒரு இதயம். எனக்கும் அவருக்கும் 46 வருட நட்பு.
16 வயதினிலே படத்தின் போது பிராசத் ஸ்டூடியோவுக்கு ஒரு மோட்டார்பைக்கில் பின்னாடி உட்கார்ந்து கொண்டு வந்தார். பரட்டை கேரக்டருக்குப் பொருத்தமான ஆளைத் தேடிக்கிட்டு இருந்தேன். கருப்பா முடியை எல்லாம் பரட்டை மாதிரி போட்டுருக்குறானே. இவன் நம்ம கேரக்டருக்கு சரியா இருப்பானேன்னு நினைச்சி மேக்கப் மேன் சுந்தரமூர்த்தியிடம் விசாரிச்சேன்.
அப்போ தான் அபூர்வ ராகங்கள், மூன்று முடிச்சு படங்களில் ரஜினி நடித்துக் கொண்டு இருந்தார். அவரைக் கூப்பிட்டு நான் ஒரு சின்ன பட்ஜெட்ல படம் பண்ணிக்கிட்டு இருக்கேன்னு சொன்னேன். பரவாயில்ல... பரவாயில்ல... சொல்லுங்க சொல்லுங்கன்னு ரஜினி சொன்னார். நீங்க அதுல பரட்டைங்கற கேரக்டர்ல நடிச்சிக் கொடுக்கணும்னு சொன்னேன். ஓகே ஓகேன்னாரு.
சம்பளம் 5000 கேட்டாரு. நான் சின்ன பட்ஜெட் படம்னு சொன்னேன். 4000 ஓகேவான்னு கேட்டாரு. நான் ரொம்ப சின்ன பட்ஜெட் படம்னு சொன்னேன். அப்புறம் 3000 ஓகேன்னாரு. நானும் சரின்னு சொல்ல அப்படி அவரு நடிச்சிக் கொடுத்ததுதான் 16 வயதினிலே.
நானும் அவரும் அந்தக் காலகட்டத்தில் ஒரு கெஸ்ட் ஹவுஸில் தங்கி இருந்தோம். நானும், ரஜினியும் வராண்டாவுல படுத்து ராத்திரி எல்லாம் கதை பேசுவோம். உன் உண்மையான உழைப்புக்கு உன் உள்ளம் எங்கேயோ இருக்கும். இறைவன் எழுதி வைத்து இருக்கிறான். அப்பவும் நான் அவருக்கு முழு சம்பளம் கொடுக்கல. 2500 தான் கொடுத்தேன். அந்த 500ஐ இப்பவும் கேட்பார். அந்த 500ன்னு சொல்வார். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.