முதல் படத்துல நான் போட்ட பாட்ட ஒருத்தனும் பாராட்டல!.. ஃபீல் பண்ணி பேசும் இளையராஜா!...
![ilayaraja ilayaraja](https://cinereporters.com/h-upload/2025/02/17/31666-ilayaraja2.jpg)
Ilayaraja: எந்த ஒரு கலையாக இருந்தாலும் அது தொடர்பான கலைஞர்களுக்கு பாராட்டுக்கள் மட்டுமே ஊக்கமளிக்கும். ஏனெனில், எல்லா கலைகளுமே மக்களுக்காகவும், ரசிகர்களுக்காகவும் உருவாக்கப்படுபவைதான். ‘நன்றாக இருக்கிறது’ என சொல்லி கை தட்டுவதுதான் கலைஞர்களுக்கு ரசிகன் கொடுக்கும் வெகுமதி. ஊதியத்தை விட பாராட்டுக்களே கலைஞர்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்கும்.
அன்னக்கிளி வாய்ப்பு: கூத்து, நாடகம், சினிமா, இயக்கம், நடிப்பு என எந்த துறையில் இருப்பவராக இருந்தாலும் இது பொருந்தும். எங்கோ மதுரையில் பண்ணைபுரத்தில் பிறந்து சென்னை வந்து இசையமைப்பாளர் சிலரிடம் உதவியாளராக வேலை செய்து பல முயற்சிகள் செய்து அன்னக்கிளி படம் மூலம் சினிமாவில் இசையமைக்க துவங்கி தனது பாடல்கள் மூலம் தமிழ்நாட்டின் பட்டிதொட்டியெங்கும் பிரபலமானவர்தான் இளையராஜா.
80களில் கோலிவுட்டின் முக்கியமான மற்றும் தவிர்க்கமுடியாத இசையமைப்பாளராக இருந்தார் இளையராஜா. அவரின் பாடல்கள் பட்டி தொட்டியெங்கும் பாடியது. அப்போது வெளியான 90 சதவீத படங்களுக்கு இசை அவர்தான். அவரின் இசையை நம்பியே அப்போது பெரும்பாலான திரைப்படங்கள் உருவானது.
முதல் பட வாய்ப்பு: கதாசிரியர், பாடலாசிரியர் மற்றும் தயாரிப்பாளர் என பல முகங்களை கொண்டிருந்த பஞ்சு அருணாச்சலத்திடம் வாய்ப்பு கேட்டு போனார் இளையராஜா. அவர் அமர்ந்திருந்த டேபிளில் கைகளால் தட்டி சில பாடல்களை பாடி காட்டினார். ராஜாவிடம் திறமை இருக்கிறது என்பதை புரிந்துகொண்ட பஞ்சு அருணாச்சலம் அன்னக்கிளி படத்தில் இசையமைக்க ராஜாவுக்கு வாய்ப்பு கொடுத்தார்.
இளையராஜாவின் முதல் பாடல்: முதல் படத்திலேயே பல சிக்கல்களை சந்தித்தார் ராஜா. ராஜா எழுதிக்கொடுத்த இசைக் குறிப்புகளில் இருந்த சின்ன தவறுகளை பார்த்து இசைக்கலைஞர்கள் சிரித்தார்கள். பாடகி ஜானகியை வரவழைத்து அன்னக்கிளி உன்னை தேடுதே பாடலை சொல்லி அவர் பாட துவங்கியபோது கரண்ட் கட் ஆனது. பொதுவாக சினிமாவில் அதை அபசகுணமாக பார்ப்பார்கள். இது முடிந்து, ஜானகி பாட துவங்கினார். அவர் பாடி முடித்ததும் பாடல் ரெக்கார்ட் ஆகவே இல்லை. அதன்பின் அவர் மீண்டும் பாடினார்.
பாராட்டை எதிர்பார்த்த ராஜா: சமீபத்தில் ஊடகம் ஒன்றில் பேசிய இளையராஜா ‘அன்னக்கிளி பட பாடல்கள் உருவானபோது முதலில் அன்னக்கிளி உன்னத் தேடுதே பாடலை ஒலிப்பதிவு செய்தோம். அடுத்து ‘ என்னிடம் இன்னொரு பாடல் இருக்கிறது என்றேன். பச்சரிசி என துவங்கும் அந்த பாடல் புதுவிதமான ஒலியில் உருவாகி கொண்டிருந்தது. அப்படி ஒரு பாடல் அப்போது வந்தது இல்லை. அந்த பாடலை ஒலிப்பதிவு செய்து நானும் அங்கிருந்த இசைக்கலைஞர்களும் கேட்டோம். பாடலை கேட்டுவிட்டு பாடல் நன்றாக இருக்கிறது என சொல்லுவார்கள் என எதிர்பார்த்தேன். ஆனால், அவர்கள் எதுவுமே சொல்லவில்லை. நன்றாக இல்லை என்று சொல்லியிருந்தால் கூட சந்தோஷப்பட்டிருப்பேன். ஆனால், ஒரு கட்டத்தில் ஆன்மிகத்தில் நான் நுழைந்துவிட்டதால் பாராட்டையெல்லாம் நான் எதிர்பார்க்கவே இல்லை’ என சொல்லியிருக்கிறார்.