எம்.எஸ்.வியிடம் கிடார் வாசித்த இளையராஜா!. அன்னக்கிளியெல்லாம் அப்புறம்தான்!..

by Murugan |   ( Updated:2025-03-13 08:05:08  )
எம்.எஸ்.வியிடம் கிடார் வாசித்த இளையராஜா!. அன்னக்கிளியெல்லாம் அப்புறம்தான்!..
X

Ilayaraja: அன்னக்கிளி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக மாறியவர் இளையராஜா. முதல் படத்தில் இவர் கொடுத்த பாடல் பட்டிதொட்டியெங்கும் பாடி இவரை பிரபலமாக்கியது. அதன்பின் தொடர்ந்து பல படங்களுக்கும் இசையமைத்தார். இந்திய சினிமாவில் குறைவான காலத்தில் அதிக படங்களுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இவர்தான்.

இசையமைக்க துவங்கிய 3 வருடங்களில் 100 படங்களை முடித்திருந்தார் இளையராஜா. மூடுபனி அவரின் 100வது திரைப்படமாகும். இளையராஜா போல மிகவும் வேகமாக பாடல்களை கொடுக்கும் இசையமைப்பாளர் இந்தியாவிலேயே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். பாலா இயக்கிய தாரதப்பட்டை படம் இளையராஜாவின் ஆயிரமாவது படம்.


இப்போதும் ஆக்டிவாக இசையமைத்து வருகிறார். அவ்வப்போது பல ஊர்களுக்கும் சென்று இசை நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறார். அதோடு, இந்தியாவில் எந்த இசையமைப்பாளரும் செய்யாத சிம்பொனி இசையை லண்டன் போய் செய்து காட்டியிருக்கிறார். இவரைத்தொடர்ந்து பலரும் அந்த முயற்சிகளில் ஈடுபடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

எல்லா இசைக்கருவிகளையும் முழுமையாக கற்றுக்கொண்டு சில இசையமைப்பாளர்களிடம் உதவியாளராக வேலை செய்த பின்னர்தான் இசையமைப்பாளராக மாறினார். 70களில் சென்னையின் மிகவும் முக்கியமான கிடாரிஸ்ட்டாக இளையராஜா இருந்தார். இதை பல மூத்த இசைக்கலைஞர்களே சொல்லியிருக்கிறார்கள்.


அப்போது பல படங்களுக்கும் இசையமைத்த ஜி.கே.வெங்கடேஷிடம் சேர்ந்து கிட்டத்தட்ட 200 படங்களில் உதவியாளராக வேலை செய்திருக்கிறார். இந்நிலையில், கவிஞர் வாலி ஊடகம் ஒன்றில் பல வருடங்களுக்கு முன்பே கொடுத்த பேட்டியில் ஒரு புதிய தகவலை சொல்லியிருக்கிறார்.

எம்.எஸ்.வி இசையமைத்த ‘அவளுக்கென்று ஒர் மனம்’ என்கிற படத்தில் நான் பாடல்கள் எழுதினேன். அப்போது அந்த படத்தின் பாடல்கள் ஒலிப்பதிவு செய்யப்பட்டப்போது இளையராஜா கிடார் வாசித்துகொண்டிருந்தார். நான் எப்படி கண்ணாதாசனை பின்பற்றாமல் எனக்கென தனி ஸ்டைலில் எழுதினேனோ அதுபோல் இளையராஜாவும் தனித்தன்மையால் வெற்றி பெற்றார் என சொல்லியிருந்தார்.

Next Story