ரஜினியோட கூலி இப்பதான்!. ஃபாரின் மார்க்கெட்டை அப்பவே கலக்கிய கமல்ஹாசன்!...
Kamalhaasan: இப்போதெல்லாம் பேன் இண்டியா என்கிற வார்த்தை திரை உலகினரால் அடிக்கடி உச்சரிக்கப்படுகிறது. இதை துவங்கி வைத்தவர் இயக்குனர் ராஜமவுலி. இவர் தெலுங்கில் எடுத்த பாகுபலி படம் தமிழ், ஹிந்தி, கன்னடம் மற்றும் மலையாள மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியாகி பல நூறு கோடிகளை அள்ளியது.
அதைத்தொடர்ந்து கேஜிஎப், பாகுபலி 2, கேஜிஎப் 2, காந்தரா, ஆர்.ஆர்.ஆர் போன்ற படங்களும் பேன் இண்டியா படங்களாக வெளியாகி வசூலை அள்ளியது. எல்லா மொழிகளிலும் வசூலை அள்ளுவதற்காக எல்லா மொழிகளில் இருந்தும் பிரபலமான நடிகர்களை கொண்டு வந்து படங்களில் நடிக்க வைத்தார்கள். இதைப்பார்த்து ரஜினிக்கும் அந்த ஆசை வந்தது.
அப்படித்தான் ஜெயிலர் படத்தில் மோகன்லா, சிவராஜ்குமார் ஆகியோர் நடித்தார்கள். கூலி படத்தில் நாகார்ஜுனா, சௌபின் சாஹிர், உபேந்திரா மற்றும் பாலிவுட் நடிகர் அமீர்கான் என பலரும் நடித்திருக்கிறார்கள். ரஜினி இப்போது நடித்து வரும் ஜெயிலர் 2-விலும் பாலையா உள்ளிட்ட நடிகர்கள் நடிக்கவிருக்கிறார்கள். வெற்றிக்காகவும், பல நூறு கோடிகளை அள்ளுவதற்காகவும் இதை தயாரிப்பாளர்கள் செய்ய துவங்கிவிட்டனர். புஷ்பா 2 படம் 1800 கோடி வசூலை பெற்று இமாலய சாதனையை பெற்றுவிட்டது இதற்கு முக்கிய காரணம்.
ஆனால், பேன் இண்டியா என்கிற கான்செப்டை 80களிலேயே செய்தவர் கமல் என்பது பலருக்கும் தெரியாது. அவரின் சிப்பிக்குள் முத்து, சலங்கை ஒலி, பேசும் படம் ஆகியவை தெலுங்கில் எடுக்கப்பட்டு தமிழில் டப் செய்யப்பட்டு வெளியானது. இதில் பேசும் படத்தில் மட்டும் வசனம் இடம் பெறவில்லை. அதேபோல், தெலுங்கில் பாலச்சந்தர் இயக்கி கமல், சரிதா நடித்த மரோசரித்ரா படம் தமிழ்நாட்டிலும் தெலுங்கில் வெளியாகியே சூப்பர் ஹிட் அடித்தது.
மேலும், ஏஜ் துஜே கேலியோ போன்ற நேரடி ஹிந்தி படங்களிலும் நடித்து ஹிட் கொடுத்தார் கமல். அவரின் அவ்வை சண்முகி படம் தமிழ், ஹிந்தி என 2 மொழிகளிலும் எடுக்கப்பட்டது. அதாவது 80,90களிலேயே பேன் இண்டியா நடிகராக இருந்தவர் கமல்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள கூலி படத்தின் ஓவர்சீஸ் அதாவது வெளிநாட்டில் படத்தை வெளியிடும் உரிமை மிகவும் அதிக விலைக்கு போயிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. ஆனால், தென்னிந்தியாவில் ஓவர் சீஸ் வியாபரத்தை துவங்கி வைத்ததே கமல் படங்கள்தான். 80களில் கமலின் படங்கள் மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் நல்ல வசூலை பெற்றது. சினிமா உலகினர் சொல்லும் FMS என்கிற வியாபாரத்தை இருந்த இடத்திலிருந்து ஆட்டிப் படைத்தவர் கமல். இதைத்தான் இப்போது ரஜினி, விஜய், அஜித் ஆகியோர் செய்து வருகிறார்கள்.