பத்மினிக்கு கூட சிவாஜி இப்படி முத்தம் கொடுக்கலயே!.. இளையராஜாவிடம் வாலி அடித்த கமெண்ட்!...
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ஒருவர் மீது அன்பு காட்டுவது என முடிவு செய்துவிட்டால் அதில் அளவெல்லாம் வைத்திருக்க மாட்டார். அள்ளி கொட்டி விடுவார். அவரிடம் எப்போதும் ஒரு குழந்தைத்தனம் இருக்கும். அது அவருடன் நெருங்கி பழகியவர்கள் எல்லோருக்கும் தெரியும். நடிகர் கமல் கூட வெளியே செல்லும்போது சில சமயம் தனது இரண்டு குழந்தைகளையும் சிவாஜி வீட்டில் விட்டுவிட்டு செல்வாராம். அவர்களை மிகவும் அன்புடன் கவனித்துக்கொள்வாராம் சிவாஜி.
சினிமாவில் சிவாஜி கணேசன் போடாத வேஷம் இல்லை. முதல் படமான பராசக்தியிலேயே அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி கைத்தட்டல் வாங்கினார். அதன்பின் பல திரைப்படங்கள், பல கதாபாத்திரங்கள் என வாழ்ந்து காட்டினார் சிவாஜி. சாதாரண ஏழை, பெரும் பணக்காரர், போலிஸ் அதிகாரி, வழக்கறிஞர், நீதிபதி, வயதான குமாஸ்தா, ஸ்டைலான பணக்காரர், கடவுள் அவதாரங்கள், வ.உசி, வீரபாண்டிய கட்டபொம்மன் போன்ற சுதந்திர போராட்ட தலைவர்கள், ஆன்மிகவாதிகள் என அவர் ஏற்காத கதாபாத்திரங்கள் இல்லை.
அதனல்தான் அவருக்கு நடிகர் திலகம் என்கிற பட்டம் கிடைத்தது. ஆக்ஷன் பட விரும்பிகள் எம்.ஜி.ஆர் படம் பார்க்கப்போனால், நல்ல குடும்ப செண்டிமெண்ட் மற்றும் கதையம்சம் கொண்ட படங்களை பார்க்க விரும்பியவர்கள் சிவாஜி படம் பார்க்கபோனார்கள். சிவாஜியுடன் அதிக படங்களில் நடித்தவர் பத்மினி.
இருவருக்குமான ஜோடிப்பொருத்தம் என்பது அவ்வளவு அழகாக இருக்கும். பல படங்களில் இருவரும் ஒன்றாக நடித்திருக்கிறார்கள். சிவாஜியை திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் பத்மினிக்கு இருந்தாலும் சில காரணங்களால் அது நடக்கவில்லை என்றும் சொல்கிறார்கள். பல படங்களில் இருவரும் இணைந்து நடித்தாலும் தில்லானா மோகனாம்பாள் திரைப்படம் ரசிகர்களால் மறக்க முடியாத ஒன்று.
இந்நிலையில், ஒரு நிகழ்ச்சியில் பேசிய இளையராஜா ஒரு முக்கிய தகவலை பகிர்ந்துகொண்டார். தேவர் மகன் படத்தில் ‘போற்றிப் பாடடி பெண்ணே’ என்கிற பாடலில் சிவாஜி அண்ணன் சில வசனங்கள் பேசுவார். அதை ரெக்கார்ட் செய்வதற்காக என்னுடைய ரிக்கார்டிங் தியேட்டருக்கு வந்தார். அவர் பேசி முடித்ததும் அவருடன் ஒரு போட்டு எடுத்துக்கொண்டேன்.
போட்டோகிராபர் கிளிக் செய்யும்போது என் கன்னத்தில் சிவாஜி முத்தம் கொடுத்துவிட்டார். அது அப்படியே போட்டோவில் பதிவாகிவிட்டது. சிவாஜி அண்ணன் சென்றபின் அங்கிருந்த கவிஞர் வாலி ‘சிவாஜி பத்மினிக்கு கூட இப்படி முத்தம் கொடுக்கவில்லை’ என கமெண்ட் அடித்தார்’ என ஜாலியாக பேசியிருந்தார்.