பாட்ஷாவை விட அண்ணாமலை பெஸ்ட்!.. ரஜினியையே ஆச்சர்யப்பட வைத்த மணிகண்டன்..

by Murugan |
baasha
X

Baasha movie: ரஜினியின் திரைவாழ்வில் அவருக்கு மிகவும் முக்கிய படமாக அமைந்தது பாட்ஷா. 1995ம் வருடம் வெளியான பாட்ஷா படத்தை சுரேஷ் கிருஷ்ணா இயக்கியிருந்தார். ரஜினியின் நண்பராக சரண் ராஜ் நடித்திருந்தார். மேலும், நக்மா, ஜனகராஜ், ரகுவரன் உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்திருந்தார்கள். இப்படத்திற்கு தேவா இசையமைத்திருந்தார்.

மாணிக் பாட்ஷா: மும்பையில் மாணிக்கமாகிய ரஜினியும், பாட்ஷாவாக சரண்ராஜும் டான் ரகுவரனை எதிர்த்து நிற்க சரண்ராஜ் கொல்லப்படுகிறார். அவரைக் கொன்றவர்களை பழி தீர்க்கும் ரஜினி டானாக மாறி தனது பெயரை மாணிக் பாட்ஷா என வைத்துக்கொள்கிறார். வில்லன் ரகுவரனோடு மோதி சரியாக திட்டமிட்டு அவரின் சம்ராஜ்யத்தை அழித்து அவரை சிறைக்கு அனுப்புகிறார்.


அப்போது ‘நீ இதை விட்டுவிட்டு சாதாரண மாணிக்கமாக உன் தம்பி, தங்கைகளை கரையேற்ற வேண்டும்’ என அவரின் அப்பா விஜயகுமார் சத்தியம் வாங்கிக்கொண்டு இறந்துபோக, மாணிக் பாட்ஷா இறந்துவிட்டது போல் காட்டிவிட்டு சென்னை வந்து ஆட்டோ ஓட்டுனராக வாழ்ந்து தனது தம்பி தங்கைகளை கரையேற்றுகிறார் மாணிக்கம். மாணிக் பாட்ஷா உயிரோடு இருப்பது வில்லன் ரகுவரனுக்கு தெரியவர அடுத்து என்ன நடக்கிறது என்பதுதான் கதை.

இந்த படத்தில் ரஜினிக்கு பல பில்டப்புகளும், மாஸ் காட்சிகளும் இடம் பெற்றிருந்தது. பல காட்சிகள் ரஜினி ரசிகர்களுக்கு கூஸ்பம்ஸ் உணர்வை கொடுத்தது. தேவாவின் இசையில் அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட் அடித்தது. ரஜினி ரசிகர்களின் ஆல்டைம் ஃபேவரைட் படமாக பாட்ஷா அமைந்தது.

ரஜினி அரசியல்: இந்த படத்தின் வெற்றிவிழாவில் ரஜினி பேசும்போதுதான் அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவை விமர்சித்து பேச 25 வருடம் ரஜினியை சுற்றி அரசியல் நிகழ்ந்தது. அரசியலுக்கு வருவேன்.. தேதி பின்னர் அறிவிக்கப்படும்.. என சொல்லி பின்னர் உடல்நிலை கருதி அரசியலுக்கு வரவில்லை என சொன்னார் ரஜினி.


ரஜினியின் அண்ணாமலை: இந்நிலையில், காலா படத்தில் ரஜினியின் மகன்களில் ஒருவராக நடித்திருந்த மணிகண்டன் கொடுத்த பேட்டியில் ‘ ஷூட்டிங் இடைவேளையில் ரஜினி சார் என்னிடம் பேசிக்கொண்டிருப்பார். அப்போது ‘என்னுடைய படங்களில் எதெல்லாம் சரியில்லை என நீங்கள் நினைக்கிறீர்கள்?’ என்றெல்லாம் கேட்பார். ‘என்னுடைய படத்தில் உங்களுக்கு எது பிடிக்கும்?’ என கேட்டார். நான் அண்ணாமலை என்றேன். ‘ஏன் பாட்ஷா பிடிக்காதா?’ எனக்கேட்டார்.

‘பாட்ஷா பிடிக்கும் சார். ஆனால், அதை விட அண்ணாமலை பெஸ்ட் படம்’ என்றேன். ‘எப்படி?’ என ஆச்சர்யமாக கேட்டார். பாட்ஷாவை பொறுத்தவரை வில்லனை கொன்றுவிட்டால் கதை முடிந்தது. அதற்கு மேல் அதில் ஒன்றுமில்லை. ஆனால், அண்ணாமலையில் நண்பனே எதிரியாக இருப்பதால் என்ன செய்ய முடியும்?.. நண்பனிடம் சவால் விட்டு பெரிய ஆளாக மாறி நண்பனை பழி வாங்கிய பின் ‘சீ நீ ஏன் இவ்வளவு மோசமாக இருக்கிறாய்’ என புரிந்து அம்மாவை அழைத்து ‘இந்த சொத்து பத்திரத்தை அசோக்கிடம் போய் கொடுங்கள்’ என சொல்லும்போது அண்ணாமலை எவ்வளவு உயர்ந்தவனாக மாறுகிறார். எனவே, அதுதான் பெஸ்ட் என்றேன். ஒரு நிமிடம் யோசித்த அவர் ‘ஆமாம். அண்ணாமலை சூப்பர் படம்’ என அவரே சிலாகித்தார்’ என மணிகண்டன் சொல்லியிருக்கிறார்.

Next Story