உனக்கு என்ன பரிசு வேணும்னு கேட்ட எம்ஜிஆர்... வசனகர்த்தா கேட்டது என்னென்னு தெரியுமா?
இன்று புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் 37வது நினைவுநாள். இவர் இன்று நம்மிடையே இல்லை என்றாலும் அவரது நினைவுகள் என்றும் நம்மை விட்டு நீங்குவதில்லை.
அவரது படங்களில் உள்ள ஆழமான கருத்துகள் மக்களின் வாழ்க்கையை செப்பனிட உதவும் ஆணிவேர்கள் என்றே சொல்லலாம். குறிப்பாக எம்ஜிஆரின் படங்களில் புகைபிடிப்பது, மது அருந்துவது, ஆபாசமாக இரட்டை அர்த்தம் தரும் வசனம் பேசுவது அவரது படங்களுக்கே உரிய தனித்துவங்கள். இவருடைய படங்களில் இன்னொரு சிறப்பும் உண்டு. கிளைமாக்ஸ் காட்சியில் வில்லனைத் திருத்துவாரே தவிர கொல்ல மாட்டார்.
அதே போல திறமை உள்ளவர்கள் யாராக இருந்தாலும் அவரைப் பாராட்டுவதில் கஞ்சத்தனம் காட்டமாட்டார். பரிசு வழங்குவதிலும் அவர் ஒரு கொடை வள்ளல்தான். எம்ஜிஆர் மற்றும் சிவாஜியின் பல சூப்பர்ஹிட் படங்களுக்கு வசனம் எழுதியவர் பிரபல வசனகர்த்தா ஆரூர்தாஸ்.
ஒரே நேரத்தில் எம்ஜிஆருக்கும், சிவாஜிக்கும் வசனம் எழுதியுள்ளார். அப்படி அவர் எழுதிய எம்ஜிஆர் படம் தாயைக் காத்த தனயன். சிவாஜியின் படம் படித்தால் மட்டும் போதுமா. இருபடங்களும் சூப்பர்ஹிட்.
இந்நிலையில் எம்ஜிஆரின் அடுத்த படம் ஒன்றுக்கு ஆரூர்தாஸ் வசனம் எழுத சென்றுள்ளார். அப்போது எம்ஜிஆர் போன படமான தாயைக் காத்த தனயனுக்கு நீ எழுதிய வசனத்தால் படம் மிகப்பெரிய வெற்றி அடைந்துள்ளது. 'உனக்கு என்ன பரிசு வேண்டும்? கேள்' என்றார். அதற்கு 'உங்க அன்பு ஒன்றே போதும்' என்று அவர் சொல்லி இருக்கிறார்.
'அப்படின்னா நானே வாங்கித் தந்துடுறேன்' என்றாராம் எம்ஜிஆர். அதன்படி 2 தினங்கள் கழித்து அவருக்கு எம்ஜிஆர் ஆபீஸ்ல இருந்து போன் வந்துள்ளது. அங்கு சென்றதும் ஆரூர்தாஸ்சுக்கு பெரிய வெள்ளித்தட்டு. அதன் மூலைகளில் தங்கத்தகடு வேயப்பட்டுள்ளது.
நடுவில் 'எம்ஜிஆர் பிக்சர்ஸ் தாயைக்காத்த தனயன் வெற்றிக்கு ஆரூர்தாஸ் அவர்களுக்கு அன்பளிப்பு' என பொறிக்கப்பட்டு இருந்ததாம். அதேபோல சிவாஜியும் இவரிடம் என்ன பரிசு வேண்டும் என கேட்டுள்ளார். அதற்கு 'அன்பே போதும்' என்று சொல்ல 'அதுதான் நிறைய இருக்குதே. வேறென்ன வேணும்'னு கேட்கும்போது ஆரூர்தாஸ் மௌனமாக இருந்துள்ளார்.
அதே போல சிவாஜியும் அவருக்கு மூன்றரை பவுன் எடையுள்ள தங்கப்பதக்கத்தை அன்பளிப்பாகக் கொடுத்துள்ளார். அதில் 'சிவாஜி பிலிம்ஸ் படித்தால் மட்டும் போதுமா 100வது நாள் வெற்றி விழா' என சிவாஜி பிலிம்ஸ் எம்ப்ளத்துடன் பொறிக்கப்பட்டு இருந்தது.