வீடு வாங்க கஷ்டப்பட்ட வில்லன்... நாடி வந்த அவருக்கு எம்ஜிஆர் செஞ்சதைப் பாருங்க...!
எம்ஜிஆரின் பல படங்களில் வில்லனாக நடித்தவர் எஸ்.வி.ராமதாஸ். அவர் பல படங்களில் நடித்தாலும் பொருளாதாரத்தில் பின்தங்கி இருந்தார். அவரால் சொந்தமாக வீடு கூட வாங்க முடியவில்லை. அவருடைய நண்பர் ஒருவர் ராமதாஸை சந்தித்தார். 'ஒரு வீடு விலைக்கு வருது. சின்ன வீடு தான். 10 ஆயிரம் ரூபாயை முன்பணமாகக் கொடுத்தா வாங்கிடலாம்' என்றார்.
'அதுக்கு அப்புறம் மெல்ல மெல்ல அந்த வீட்டுக்கான பணத்தைக் கட்டி விடலாம்' என்று அந்த நண்பர் சொன்னார். அதற்கு ராமதாஸ், 'பத்தாயிரம் ரூபாயை இப்ப கட்டிடலாம். மிச்ச பணத்துக்கு என்ன செய்றது?'ன்னு அவர் கேட்டபோது 'உங்கிட்ட தான் ரிசர்வ் பேங்க் இருக்கே...' என்றார் நண்பர்.
புரியாமல் விழிக்க, 'புரட்சித்தலைவர் எம்ஜிஆருக்கிட்ட கேட்டா அவரு உதவ மாட்டாரா என்ன? அவரைப் போய் நிச்சயமாகக் கேள். உனக்கு உதவி செய்வாரு'ன்னு ஆலோசனை சொன்னார் அந்த நண்பர். அதுவரைக்கும் ராமதாஸ் எந்த உதவியும் எம்ஜிஆருக்கிட்ட கேட்டது இல்லை.
இந்த உதவியைக் கேட்க மிகப்பெரிய தயக்கம் இருந்தது. ஆனா அதை எல்லாம் தாண்டி அவரை சந்திக்க முடிவு எடுத்தார். அப்போது எம்ஜிஆரை சந்தித்து 'ஒரு வீட்டை வாங்க 10 ஆயிரம் ரூபாயை முன்பணமாகக் கொடுத்துட்டேன். ஆனா மிச்ச பணத்துக்கு என்ன செய்றதுன்னு தெரியல'ன்னு சொல்லிருக்காரு. அதைக் கேட்டதும் எம்ஜிஆர் சற்று நேரம் மவுனமாக இருந்தார்.
'அவ்ளோ பணத்துக்கு இப்போ எங்கே போறதுன்னு தெரியலயே. இதை எல்லாம் முன்னாடியே யோசித்து விட்டு அல்லவா முன்பணம் கொடுத்திருக்க வேண்டும். இப்ப அந்த வீட்டை வாங்க முடியாமப் போச்சுன்னா அந்த 10 ஆயிரம் ரூபாயும் அல்லவா போயிடும்'னு எம்ஜிஆர் சொன்னார். 'சரி போ. அப்புறம் பார்க்கலாம்'னு அனுப்பி விட்டார்.
அப்புறம் 'எம்ஜிஆருக்கிட்ட இதை சொல்லிருக்கவே கூடாதோ. நமக்கு ஒண்ணுமே பண்ணலையே'ன்னு மிகுந்த மன வருத்தத்தோடு வீட்டுக்குப் போனார். ராமதாஸை திருப்பி அனுப்பிவிட்டாலும் எம்ஜிஆரின் மனசுல என்ன இருந்ததுன்னு அவருக்கு எப்படி தெரியும்? அவரு போனதும் தான் நடிக்கிறதுல ஐந்தாறு கம்பெனிக்குப் போன் பண்ணினார் எம்ஜிஆர்.
'உங்க படங்கள் எல்லாத்துலயும் ராமதாஸ்சுக்கு முக்கியமான கதாபாத்திரம் கொடுங்க. உடனடியாக அவரை ஒப்பந்தம் செய்து முன்பணமும் கொடுங்க'ன்னு சொன்னார். அடுத்த 5 நாள்களில் 5 நிறுவனங்களில் இருந்து ராமதாஸ்சுக்கு முன்பணம் போனது.
அந்த பணத்திலேயே அந்த முழுவீட்டுக்கான பணத்தையும் கட்டி முடித்து விட்டார். இன்றும் மக்கள் மனதில் எம்ஜிஆர் வாழ்கிறார் என்றால் மற்றவருக்கு எப்படி உதவுவது என்று முழுநேரமும் அவர் சிந்தித்துக் கொண்டு இருப்பதுதான். மேற்கண்ட தகவலை பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் தெரிவித்துள்ளார்.