ஃபெயிலியர் டைட்டில்!.. ஆனாலும் ஹிட் அடித்த ரஜினி படம்!.. ஒரு செம பிளாஷ்பேக்!...

Rajinikanth: ஒரு திரைப்படத்திற்கு தலைப்பு மிகவும் முக்கியம். ஏனெனில், அந்த தலைப்பால்தான் ஒரு படம் ரசிகர்களால் நினைவு கூறப்படும். ரஜினி நடித்த படங்களின் தலைப்பை இப்போது தனுஷ், சிவகார்த்திகேயன் போன்றவர்கள் பயன்படுத்தி வருகிறார்கள். பொல்லாதவன், படிக்காதவன், வேலைக்காரன், மாவீரன் போன்ற தலைப்புகளை ஏற்கனவே அவர்கள் பயன்படுத்திவிட்டார்கள்.
அடுத்து பணக்காரன், மன்னன், உழைப்பாளி போன்ற தலைப்புகளெல்லாம் பின்னாளில் கண்டிப்பாக இவர்கள் பயன்படுத்தினாலும் ஆச்சர்யப்படுவதிற்கில்லை. இந்நிலையில் செண்டிமெண்ட்டாக சரியில்லை என சொல்லப்பட்ட தலைப்பு ரஜினி படத்திற்கு வைக்கப்பட்டு படம் ஹிட் அடித்த சம்பவம் பற்றி பார்ப்போம்.
தமிழ் சினிமாவின் வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக இருந்தது ஏவிஎம் நிறுவனம். கருப்பு, வெள்ளை காலத்திலேயே பல திரைப்படங்களை தயாரித்தனர். நடிகர் திலகம் சிவாஜியை பராசக்தி திரைப்படம் மூலம் அறிமுகம் செய்ததும் இந்த நிறுவனம்தான். திரையுலகில் மிகவும் பாரம்பரியமிக்க நிறுவனமாக ஏவிஎம் நிறுவனம் இருக்கிறது.

80களில் ரஜினியை வைத்து பல படங்களை இந்நிறுவனம் தயாரித்திருக்கிறது. ஒருமுறை ஒரு கதாசிரியர் ஏவிஎம் சரவணனை சந்தித்து ஒரு கதை சொல்ல அதை படமாக எடுப்பது என முடிவு செய்யப்பட்டது. ஆனால், கதை, திரைக்கதை, வசனம் என என் பெயரை போட வேண்டும் என அந்த கதாசிரியர் சொல்ல சரவணன் அதை ஏற்கவில்லை. ஏவிஎம் நிறுவனம் தயாரிக்கும் படங்களில் திரைக்கதையை பஞ்சு அருணாச்சலம்தான் அமைப்பார். எனவே, திரைக்கதைக்கு மட்டும் அவரின் பெயரை போடுவோம் என சொல்ல கதாசிரியர் ஏற்கவில்லை.
அதன்பின் வி.சி.குகநாதன் சொன்ன கதைக்கு, பஞ்சு அருணாச்சலம் திரைக்கதை அமைக்க ரஜினி நடிப்பது என படத்தை துவங்கினார்கள். கமலுக்கு சகலகலா வல்லவன் என தலைப்பு வைத்தது போல ரஜினிக்கு ஒரு தலைப்பு வைக்க ஆசைப்பட்ட ஏவிஎம் நிறுவனம், அவர் நல்ல மனிதராக இருப்பதால் மனிதன் என தலைப்பு வைத்தனர்.
ஆனால், ‘ஏற்கனவே ஒரு நாடகத்திற்கு இந்த தலைப்பு வைக்கப்பட்டு அந்த நாடகம் தோல்வி அடைந்திருக்கிறது. எனவே, அந்த தலைப்பு வேண்டாம்’ என சிலர் சொல்ல, ‘இந்த படத்தின் கதை கண்டிப்பாக ஹிட் அடிக்கும்’ என சரவணன் சொல்லிவிட்டார். அவர் சொன்னபடியே மனிதன் படம் பெரிய வெற்றியை பெற்றது. அப்போது கமலின் நாயகன் படமும் வெளியானது. ஆனால், மனிதன் படமே அதிக வசூலை பெற்றது. பின்னாளில் மனிதன் என்கிற தலைப்பில் உதயநிதி ஸ்டாலினும் ஒரு படத்தில் நடித்தது குறிப்பிடத்தக்கது.