தயாரிப்பாளர்களை காக்க வைத்த இளையராஜா!.. எல்லோரின் கோபமும் இப்படி திரும்பிடுச்சே!...
Ilayaraja: அதீத திறமை கொண்டவர்களிடம் எப்போதும் ஒரு தலைக்கணம் இருக்கும். அது கலைஞர்களுக்கே உரித்தானது. பலருக்கும் அது தவறு போல தெரிந்தாலும் அவர்களிடம் நியாயம் இருக்கும். கண்ணதாசன், வாலி, வைரமுத்து, இளையராஜா, பாரதிராஜா என சொல்லிக்கொண்டே போகலாம். அவர்களின் கர்வத்தில் தவறு இருக்காது. அவர்களை பிடிக்காதவர்கள் வேண்டுமனால் விமர்சனம் செய்யலாம்.
கலைஞர்களின் கர்வம்: ஆனால், அவர்களின் திறமையை நன்கு அறிந்தவர்களுக்கு அவர்களின் கர்வத்தில் இருக்கும் நியாயம் புரியும். அன்னக்கிளி திரைப்படத்தின் பாடல்கள் சூப்பர் ஹிட் ஆனதால் தொடர்ந்து பல படங்களுக்கும் இசையமைத்தார் இளையராஜா. காலையில் 2 மணி நேரத்தில் டியூன் ஓகே செய்து மாலைக்குள் பாடலை ஒலிப்பதிவு செய்து கொடுத்துவிடுவார். வாரத்தில் 3 நாட்கள் பாடல்களை உருவாக்குவது, மீது நாட்கள் பின்னனி இசை தொடர்பான பணிகள் என பரபரப்பாக இருப்பார்.
ஹிட்டுக்கு தேவை இளையராஜா: இளையராஜாவின் இசை இருந்தாலே படம் ஓடிவிடும் என்கிற நிலைமை 80களில் இருந்தது. எல்லா பெரிய நடிகர்களும் தங்களின் திரைப்படங்களுக்கு ராஜாவே இசையமைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்கள். ஒரு படத்தை துவங்குவதற்கு முன் இளையராஜாவிடம் சம்மதம் பெற்றுவிட்டாலே படம் பாதி வெற்றி என தயாரிப்பாளர்களும், இயக்குனர்கள் நினைத்த காலம் அது.
எனவே, இளையராஜா இசையமைக்கும் பிரசாத் ஸ்டுடியோவில் எப்போதும் அவரை பார்க்க இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் கூட்டமாக நிற்பார்கள். காலை 6.30 மணிக்கு காரில் வந்து இறங்குவார் இளையராஜா. பலரும் அவரை பார்த்து வணக்கம் போடுவார்கள். யாரையும் பார்க்காமல் உள்ளே போய்விடுவார் ராஜா.
ராஜா கொடுக்கும் வாய்ப்பு: அதன்பின் அவரின் உதவியாளர் வெளியே வந்து அங்கு நிற்கும் பலரில் ஒருவரை மட்டும் உள்ளே அழைப்பார். அதாவது, அன்று அவருக்குதான் இளையராஜா சம்மதம் தெரிவித்திருக்கிறார் என அர்த்தம். உடனே மற்றவர்கள் எல்லாம் அங்கிருந்து போய் விட்டு அடுத்த நாள்தான் வருவார்கள். ஆனாலும், யாருக்கும் இளையராஜா மீது கோபம் வரவில்லை. ஏனெனில், தங்களின் படத்தை காப்பாற்றும் கடவுளாக அவரை தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் பார்த்தார்கள்.
ஆனால், எல்லா துறையிலும் புதியவர்கள் வருவார்கள் அல்லவா!. அப்படித்தான் ஏ.ஆர்.ரஹ்மான், தேவா போன்றவர்கள் ஹிட் பாடல்களை கொடுத்தபோது பலரும் அவர்களிடம் போனார்கள். வித்யாசாகார், சிற்பி, எஸ்.ஏ.ராஜ்குமார் போன்ற பல புதிய இசயமைப்பாளர்களும் வந்தார்கள். இதனால் இளையராஜாவுக்கு கால் கடுக்க காத்திருக்க யாரும் விரும்பவில்லை. இதன் காரணமாக இளையராஜா இசையமைக்கும் திரைப்படங்களின் எண்ணிக்கை குறைந்துகொண்டு வந்தது.
ஆனால், இப்போது தன்னை நம்பி வரும் இயக்குனர்களுக்கு அழகான மெலடி பாடல்களை இளையராஜா கொடுத்து வருகிறார். அதோடு, இசை நிகழ்ச்சிகளை நடத்துவது, சிம்பொனி அமைப்பது என பிஸியாகவே இருக்கிறார். ‘என்னை மதித்து நான் வேண்டும் என என்னிடம் வருபவர்களே போதும்’ என்பதே இளையராஜாவின் நிலைப்பாடாக இருக்கிறது.