ரோபோ சங்கரின் கையை பிடித்துக்கொண்டு கண்ணீர் விட்ட கேப்டன்!.. மறக்க முடியாத சம்பவம்!...

by Murugan |
robo shankar
X

Vijayakanth: திரையுலகிலும், ரசிகர்களின் மத்தியிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது விஜயகாந்தின் மறைவுதான். அதற்கு காரணம் விஜயகாந்த் மீது மக்களுக்கு இருந்த இமேஜ்தான். அப்படி சொல்வதை விட விஜயகாந்த் மக்களிடம் ஏற்படுத்தியிருந்த தாக்கம் என்றே சொல்லலாம். எல்லோரின் மீது அவர் காட்டிய இரக்கம், சுயநலம் இல்லாத குணம், எப்போதும் மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்கிற எண்ணம் என சொல்லிக்கொண்டே போகலாம்.

விஜயகாந்த் ஒரு நடிகர் என்பதைவிட அவர் ஒரு நல்ல மனிதர் என்பதே அவர் மக்களிடம் உருவாக்கிய இமேஜ். அதை அவர் ஒன்றும் திட்டமிட்டு செய்யவில்லை. அவரின் இயல்பான குணம் அது. சிரித்த முகத்தோடு எப்போதும் எல்லோரையும் அணுகும் அவரின் குணம், வெள்ளந்தியான அவரின் குணாதிசியம் இதுதான் அவரை எல்லோருக்கும் பிடிக்கக் காரணம்.


விஜயகாந்த் என்றாலே மக்களுக்கு நினைவுக்கு வருவது அவரின் கணீர் குரலும், திரைப்படங்களில் அவர் வசனம் பேசும் ஸ்டைலும்தான். உரக்க குரலில் பல கருத்துள்ள வசனங்களை அவர் திரைப்படங்களில் பேசியிருக்கிறார். தவறான காவல்துறை அதிகாரிகள், வழக்கறிஞர்கள், நீதிபதிகள், ஊழல் செய்யும் அரசியல்வாதிகள் என எல்லோரையும் சகட்டு மேனிக்கு விமர்சனம் செய்திருக்கிறார்.

பல படங்களில் அவர் அப்படி பேசியிருந்தார்லும் கேப்டன் பிரபகாரன், ஏழை ஜாதி போன்ற படங்களில் அரசியல் வசனங்கள் தூக்கலாகவே இருக்கும். ரசிகர்கள் அப்படி பார்த்த விஜயகாந்த் உடல்நலக்குறைவு ஏற்பட்டு சரியாக பேச முடியாமல், நிற்க முடியாமல், எதையும் நினைவுப்படுத்தி கொள்ள முடியாமல் இருந்த நிலையை பார்த்து பலரும் வருத்தப்பட்டனர்.


விஜயகாந்துடன் நெருக்கமாக பழகிய பலரும் அவரின் உடல்நிலை பற்றி ஊடகங்களில் பேசினார்கள். அதில், சிலர் விஜயகாந்தை நேரில் பார்க்க முடியவில்லை என்றும் சொன்னார்கள். ரஜினி, எஸ்.ஏ.சந்திரசேகர் உள்ளிட்ட பலரும் விஜயகாந்தை நேரில் போய் பார்த்தார்கள். இது தொடர்பான புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி வைரலானது. 2023ம் வருடம் டிசம்பர் மாதம் விஜயகாந்த் இறந்துபோனார். அவரின் இறுதி ஊர்வலத்தில் பலரும் கலந்து கொண்டனர்.

இந்நிலையில், நடிகர் ரோபோ சங்கர் ஊடகம் ஒன்றில் பேசியபோது ‘கேப்டன் இறந்து போவதற்கு 2 வருடங்களுக்கு முன் அவரின் வீட்டுக்கு போனேன். ‘உங்களை மாதிரியே பேசுவாரே ரோபோ சங்கர். அவர் வந்திருக்காருன்னு’ அவரிடம் பிரேமலதா மேடம் சொன்னாங்க. அதற்கு அவர் ‘பேச சொல்லு’ என்பது போல கையை காட்டினார்.

நானும் அவரை மாதிரியே அவரிடம் பேசிக்காட்டினேன். அப்போது அவர் என் கையை தேடிப்பிடித்து அப்படியே நெஞ்சில் வைத்துக்கொண்டு எடுக்கவே இல்லை. அவரின் கண்களில் இருந்து கண்ணீர் வந்தது. எனக்கு அந்த இடத்தை விட்டு வரவே மனம் இல்லை. அதை என்னால் மறக்கவே முடியாது’ என உருக்கமாக பேசியிருந்தார்.

Next Story