விஜயகாந்த் செய்த உதவி!.. கண்கலங்கி நன்றி சொன்ன எம்.எஸ்.பாஸ்கர்!..

By :  MURUGAN
Update: 2025-05-10 14:06 GMT

சின்னத்திரை நடிகர், பின்னணி குரல் கொடுப்பவர், காமெடி நடிகர், குணச்சித்திர நடிகர் என பல திறமைகளை கொண்டவர் எம்.எஸ்.பாஸ்கர். பல படங்களில் பல நடிகர்களுக்கு குரல் கொடுத்திருக்கிறார். சின்னத்திரையில் பிரபலமான காமெடி சீரியலான சின்ன பாப்பா பெரிய பாப்பா சீரியல் மூலம்தான் எம்.எஸ்.பாஸ்கர் ரசிகர்களிடம் பிரபலமானார்.

சினிமாவுக்கு வருவதற்கு முன் நிறைய நாடகங்களிலும் நடித்திருக்கிறார். சில வருடங்கள் எல்.ஐ.சி ஏஜெண்ட்டாகவும் இவர் பணிபுரிந்திருக்கிறார். ஆல் இண்டியா ரேடியோ மற்றும் தூர்தர்ஷன் டிவியிலும் இவர் வேலை செய்திருக்கிறார். 90களில் தெலுங்கு படங்கள் தமிழில் டப் செய்யப்பட்டு வெளியானபோது காமெடி நடிகர்களுக்கெல்லாம் தமிழில் குரல் கொடுத்தவர் இவர்தான்.

நம் குடும்பம், விழுதுகள், கங்கா யமுனா சரஸ்வதி, மாயாவி மரிச்சான் உள்ளிட்ட சில சீரியல்களிலும் நடித்திருக்கிறார். எங்கள் அண்ணா, சிவகாசி, தர்மபுரி, 8 தோட்டாக்கள் உள்ளிட்ட படங்கள் இவரை ரசிகர்களிடம் பிரபலப்படுத்தியது. குறிப்பாக ரதா மோகன் இயக்கிய மொழி படத்தில் மகன் இறந்த அதிர்ச்சியில் காலம் கடந்துபோனது தெரியாமல் பேசும் வேடத்தில் அசத்தலாக நடித்திருந்தார்.


பார்க்கிங் படத்தில் இவருக்கு முக்கிய வேடம் கிடைத்தது. இவருக்கும், ஹரீஸ் கல்யாணுக்கும் இடையே நடக்கும் ஈகோதான் படத்தின் கதையாக அமைக்கப்பட்டிருந்தது. இந்த இயக்குனரின் படத்தில்தான் சிம்பு அடுத்து நடிக்கவிருக்கிறார். சமீபத்தில் சசிக்குமார் - சிம்ரன் முக்கிய வேடத்தில் நடித்து வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற டூரிஸ்ட் ஃபேமிலி படத்திலும் எம்.எஸ்.பாஸ்கர் நடித்திருந்தார்.

இந்நிலையில், எம்.எஸ்.பாஸ்கரின் சினிமா வாழ்க்கையில் மறைந்த நடிகர் விஜயகாந்த் எவ்வளவு முக்கியமான நடிகர் என்பது பற்றி பார்ப்போம். சீரியலிலிருந்து விலகி சினிமாவில் நடிக்க வந்தபோது எம்.எஸ்.பாஸ்கரிடம் நடிகர் சங்க உறுப்பினர் அட்டை இல்லை. அது இல்லாமல் தொடர்ந்து சினிமாவில் நடிக்க முடியாத நிலை. ஆனால், அதை வாங்க சில லட்சங்கள் தேவை. அந்த பணம் இல்லாததால் உறுப்பினர் அட்டை இல்லாமலேயே சினிமாவில் நடித்து வந்திருக்கிறார்.

இது நடிகர் சங்க தலைவர் விஜயகாந்துக்கு தெரியவரவே எம்.எஸ்.பாஸ்கருக்கு உறுப்பினர் அட்டையை வாங்கி கொடுத்திருக்கிறார். அதற்கு கண்ணீர் மல்க நன்றி சொன்னாராம் எம்.எஸ்.பாஸ்கர். இதுபற்றி ஊடகம் ஒன்றில் பேசிய பாஸ்கர் ‘உறுப்பினர் அட்டையை நான் இப்போது திருப்பி கொடுத்தால் எனக்கு பல லட்சம் கிடைக்கும். ஆனால், அண்ணன் விஜயகாந்த் எனக்கு இதை சாதாரணமாக வாங்கி கொடுத்தார். அவரை போல ஒரு மனிதரை பார்க்க முடியாது’ என உருகியிருக்கிறார்.

Tags:    

Similar News